சிவராமே கவுடா - தேவராஜே கவுடா ஆடியோ வெளியாகி பரபரப்பு
சிவராமே கவுடா - தேவராஜே கவுடா ஆடியோ வெளியாகி பரபரப்பு
ADDED : மே 20, 2024 05:29 AM

பெங்களூரு : ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ஆபாச வீடியோ தொடர்பாக, முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா, பா.ஜ., பிரமுகர் தேவராஜேகவுடா மொபைல் போனில் உரையாடிய, ஆடியோ வெளியாகி உள்ளது.
ஹாசன் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா, 33. இவரது ஆபாச வீடியோ பென்டிரைவ் வெளியானதில், துணை முதல்வர் சிவகுமாருக்கு தொடர்பு இருப்பதாக, பா.ஜ., பிரமுகரும், வக்கீலுமான தேவராஜேகவுடா குற்றம் சாட்டினார். இந்த வழக்கில் குமாரசாமி பெயரை சொல்ல, 100 கோடி ரூபாய் பேரம் பேசியதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் தேவராஜேக வுடாவிடம், முன்னாள் எம்.பி., சிவராமேகவுடா பேசியதாக கூறப்படும், மொபைல் போன் ஆடியோ உரையாடல் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதன் விபரம் வருமாறு:
சிவராமே கவுடா: டி.கே.யுடன் கைகோர்த்தால் அவர் உங்களுக்கு உதவுவார். நான் பா.ஜ.,வில் இருக்கிறேன். ம.ஜ.த.,வுடன் கூட்டணி வேண்டாம் என்று, எடியூரப்பாவிடம் சொன்னேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ம.ஜ.த.,வை துாக்கி எறிய வேண்டும். அதன்பின்னர் பழைய மைசூரில் கட்சியை கட்டமைத்து விடலாம். விஜயேந்திரா தலைவர் ஆனதும் ஏதாவது புதிதாக நடக்கும் என்று நினைத்தேன். ஆனால் ஒன்றும் இல்லை.
தேவராஜ் கவுடா: அப்படியா அண்ணா...
சிவராமே கவுடா: குமாரசாமி தனது மகன் நிகிலை, ம.ஜ.த.,வில் முன்னிலைப்படுத்த நினைக்கிறார். பிரஜ்வல் வீடியோவை வெளியிட்டது, குமாரசாமி தான் என்று நீங்கள் சொல்லுங்கள். குமாரசாமி மீது பழி விழுந்து விடும். தேவகவுடா இன்னும் தற்கொலை செய்யாமல் உள்ளார். நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். நீங்கள் வக்கீல்; எதற்கும் பயப்பட வேண்டாம்.
தேவராஜேகவுடா: இந்த வழக்கு பெண்களுடன் தொடர்பு உடையது. வீடியோ வெளியானதால், அவர்கள் கண்ணியம் பாதிக்கப்பட்டு உள்ளது. இது பற்றி சிந்திக்க வேண்டாமா.
சிவராமே கவுடா: அதைப்பற்றி நீங்கள் ஏன் யோசிக்கிறீர்கள். அரசு எல்லாவற்றையும் பார்த்து கொள்ளும்.
இவ்வாறு உரையாடல் நடந்துள்ளது.

