சம்பாய் சோரன் பொம்மை முதல்வர்! கல்பனாவுக்கு அதிகாரம் தந்தது யார்?: ஜார்க்கண்ட் பா.ஜ., சரமாரி கேள்வி
சம்பாய் சோரன் பொம்மை முதல்வர்! கல்பனாவுக்கு அதிகாரம் தந்தது யார்?: ஜார்க்கண்ட் பா.ஜ., சரமாரி கேள்வி
ADDED : ஏப் 15, 2024 12:15 AM

ஜாம்ஷெட்பூர்: 'ஜார்க்கண்டில் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா, அரசு விவகாரங்கள் உட்பட பல்வேறு விஷயங்களில் ஈடுபட்டு வரும் நிலையில், சம்பாய் சோரன் பொம்மை முதல்வராக செயல்படுகிறார்' என, அந்த மாநில பா.ஜ., குற்றஞ்சாட்டியுள்ளது.
கட்சி பணி
ஜார்க்கண்டில் முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சி நடக்கிறது.
இங்குள்ள 14 லோக்சபா தொகுதிகளுக்கு, மே 13, 20, 25 மற்றும் ஜூன் 1ம் தேதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது.
மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் தலைவருமான ஹேமந்த் சோரன், நில மோசடி வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது மனைவி கல்பனா, கட்சிப் பணிகளில் ஈடுபடுவதுடன், தேர்தல் தொடர்பான கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார்.
கட்சி மற்றும் அரசு அதிகாரத்தில் எந்த பொறுப்பும் இல்லாமல், அவர் அரசியல் பணிகளில் ஈடுபடுவது குறித்து, எதிர்க்கட்சித் தலை வரும், பா.ஜ., - எம்.எல். ஏ.,வுமான அமர் பவுரி கேள்வி எழுப்பியுள்ளார்.
பொறுப்பு
அவர் மேலும் கூறியுள்ளதாவது:
முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா, சமீபகாலமாக அக்கட்சி கூட்டங்களில் ஈடுபடுவதுடன், அரசு விவகாரங்களிலும் தலையிட்டு வருகிறார்.
பொறுப்பு எதுவும் இல்லாமல், எந்த அடிப்படையில் அவர் எல்லா கூட்டங்களுக்கும் தலைமை தாங்குகிறார் என தெரியவில்லை.
ஜார்க்கண்டில் மிக முக்கிய அதிகார மையமாக அவர் மாறிவிட்டார். கல்பனாவின் அரசியல் பிரவேசம், குடும்ப அரசியலுக்கு மிகச்சிறந்த உதாரணமாகும்.
அதற்கேற்றாற்போல், முதல்வராக உள்ள சம்பாய் சோரனும், பொம்மை முதல்வராக செயல்பட்டு வருகிறார்.
இந்த லோக்சபா தேர்தலிலும், அவர்களின் கட்சி சம்பாய்க்கு முக்கியத்துவம் அளிக்காதது ஏன்? முதல்வராக உள்ளதால், மாநிலத்தில் இண்டியா கூட்டணியின் நட்சத்திரப் பேச்சாளராக அவர் இருந்திருக்க வேண்டும். ஆனால், அவருக்கான அந்தஸ்து வழங்கப்படாமல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

