என் தொகுதி திட்டத்துக்கு முட்டுக்கட்டை சிவகுமார் மீது ரமேஷ் ஜார்கிஹோளி புகார்
என் தொகுதி திட்டத்துக்கு முட்டுக்கட்டை சிவகுமார் மீது ரமேஷ் ஜார்கிஹோளி புகார்
ADDED : ஜூன் 21, 2024 05:44 AM

பெலகாவி: பா.ஜ., -- எம்.எல்.ஏ., ரமேஷ் ஜார்கிஹோளியின் கோகாக் தொகுதிக்கு கிடைக்க வேண்டிய முக்கியமான திட்டத்துக்கு, துணை முதல்வர் சிவகுமார் முட்டுக்கட்டை போட்டுள்ளதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக, பெலகாவியில் ரமேஷ் ஜார்கிஹோளி கூறியதாவது:
பெலகாவி மற்றும் பாகல்கோட்டுக்கு வரபிரசாதமாக அமைந்துள்ள கட்டி பசவண்ணா அணை பணிகளை, துணை முதல்வர் சிவகுமார் ரத்து செய்ய முயற்சித்தார். ஒருவேளை அவர் ரத்து செய்திருந்தால், போராட்டம் நடத்த வேண்டும் என, நான் முடிவு செய்திருந்தேன்.
நானும், எம்.பி., ஜெகதீஷ் ஷெட்டரும், டில்லிக்கு சென்று மத்திய வனத்துறை அமைச்சரை சந்திப்போம். திட்டத்துக்கு ஒப்புதல் பெற்று வருவோம். சிவகுமாரின் கண், கட்டி பசவண்ணா திட்டத்தின் மீது பதிந்துள்ளது. இது குறித்து, அமைச்சர் சதீஷ் ஜார்கிஜோளியுடனும் பேசினேன். இவரே திட்டத்தை நிறுத்த முயற்சிப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த சிவகுமார் முயற்சிக்கிறார்.
திட்டத்துக்கு இடையூறு செய்ய, நான் முயற்சிக்கவில்லை என, சதீஷ் என்னிடம் கூறினார்.
திட்ட பணிகள் முடிந்தால், மக்களுக்கு உதவியாக இருக்கும். சட்டசபை தேர்தலில் எனக்கு பின்னடைவு ஏற்பட்டது. ஓராண்டாக நான் இயலாமையில் இருந்தேன். இதை உணர்ந்து தொண்டர்கள், லோக்சபா தேர்தலில் பணியாற்றி, வேட்பாளரை வெற்றி பெற வைத்தனர்.
மஹா தலைவர் (சிவகுமார்) மற்றும் விஷ கன்னிகை (லட்சுமி ஹெப்பால்கர்) திமிர்த்தனமான அரசியல் செய்கின்றனர். முதல்வர் சித்தராமையா பற்றி, நான் எதுவும் பேசவில்லை.
நான் சாதுவாக ஹிமாலயாவுக்கு செல்ல நினைத்தேன். ஹிமாலயாவில் ஒரு இடத்தை பார்த்து வந்தேன். அவ்வப்போது தோற்றால், எங்களால் சகிக்க முடியாது. தோற்றால் நாங்கள் தலைவர்களாக இருக்கவே லாயக்கு அற்றவர்கள்.
பா.ஜ., தொண்டர்கள் பணத்தை பார்க்கவில்லை. ஒரு கப் டீயை குடிக்கவில்லை. பைக்கில் சுற்றி வந்து பிரசாரம் செய்தனர். நான் ஓட்டு போட்டுவிட்டு அன்று மாலை அமெரிக்காவுக்கு சென்றுவிட்டேன். ஜூன் 3ல் திரும்பினேன். நடப்பதை பார்த்து எனக்கு, ரத்த அழுத்தம், நீரிழிவு அதிகரித்தது.
இவ்வாறு அவர் கூறினார்.

