அவதுாறு வழக்கில் ஆஜராகாத ராகுலுக்கு ரூ.1,000 அபராதம்
அவதுாறு வழக்கில் ஆஜராகாத ராகுலுக்கு ரூ.1,000 அபராதம்
ADDED : மே 18, 2024 11:59 PM

ராஞ்சி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி அவதுாறு கருத்து தெரிவித்த வழக்கில் ஆஜராகாமல், தொடர்ந்து விலக்கு அளிக்கக்கோரியதால், காங்., - எம்.பி. ராகுலுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்து ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018ல் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் எம்.பி., ராகுல், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பற்றி அவதுாறு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக பா.ஜ., பிரமுகர் பிரதாப் காதியார், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஜார்க்கண்ட் நீதிமன்றத்தில் ராகுலுக்கு எதிராக, 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு அவதுாறு வழக்கு தொடுத்தார்.
இந்த வழக்கில் கடந்த பிப்ரவரியில் ராகுலுக்கு எதிராக ஜாமினில் வெளியே வர முடியாத வாரன்ட்டை நீதிமன்றம் பிறப்பித்தது.
அப்போது, தான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கும்படி ராகுல் மனு தாக்கல் செய்தார்.
அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்ததுடன் மார்ச் 27ம் தேதி நேரில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ராகுல் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி அனில்குமார் சவுத்ரி, விசாரணை நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.
இதற்கிடையே, வழக்கின் விசாரணையின்போது ராகுல் தரப்பில் தொடர்ந்து ஆஜராகாமல் விலக்கு அளிக்கக் கோரியதால், அவருக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இந்த அபராத தொகையை, ஜார்க்கண்ட் மாநில சட்டப்பணிகள் கமிஷனிடம் இரு வாரத்திற்குள் செலுத்த தவறினால், ராகுலின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படும் எனவும் நீதிபதி எச்சரித்தார்.

