வாக்குறுதி திட்டங்கள் கரை சேர்க்கும் பெங்., வடக்கு காங்., வேட்பாளர் உறுதி
வாக்குறுதி திட்டங்கள் கரை சேர்க்கும் பெங்., வடக்கு காங்., வேட்பாளர் உறுதி
ADDED : ஏப் 20, 2024 05:06 AM

பெங்களூரு, : ''மாநில காங்கிரஸ் அரசின் வாக்குறுதி திட்டங்கள், என்னை வெற்றி பாதையில் அழைத்து செல்லும்,'' என பெங்களூரு வடக்கு லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராஜிவ்கவுடா தெரிவித்தார்.
கர்நாடகா மட்டுமின்றி, நாட்டின் ஐந்து பெரிய லோக்சபா தொகுதிகளில் பெங்களூரு வடக்கு தொகுதியும் ஒன்று. இந்த தொகுதியில், பா.ஜ., வேட்பாளராக மத்திய அமைச்சர் ஷோபா, காங்கிரஸ் சார்பில் ராஜிவ் கவுடா போட்டியிடுகின்றனர். இருவருமே ஒக்கலிகர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
பிரதமர் நரேந்திர மோடி அலையை நம்பி பா.ஜ., வேட்பாளரும், வாக்குறுதி திட்டங்கள் கை கொடுக்கும் என்ற நம்பிக்கையில், காங்கிரஸ் வேட்பாளரும் பிரசாரம் செய்கின்றனர்.
பெங்களூரில் நேற்று ராஜிவ்கவுடா கூறியதாவது:
இம்முறை பெங்களூரு வடக்கு தொகுதியில், அதிக ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். அமைச்சர்கள் பைரதி சுரேஷ், கிருஷ்ண பைரேகவுடா, பா.ஜ., - எம்.எல்.ஏ., சோமசேகர் உட்பட பல முக்கிய தலைவர்கள் எனக்கு ஆதரவாக உள்ளனர். புலிகேசி நகரில் எங்களுக்கு அதிக ஓட்டுகள் கிடைக்கும்.
ஷோபா, அமைச்சராக எதையும் சாதிக்கவில்லை. தொகுதிக்கு அவரது பங்களிப்பு எதுவும் இல்லை. வறட்சியால் கஷ்டப்படும் விவசாயிகள் மீது, அவருக்கு அக்கறை இல்லை. தொகுதியை சேர்ந்தவருக்கு செல்வாக்கு இல்லாததால், வெளியில் இருந்து வேட்பாளரை அழைத்து வந்து களமிறக்கி உள்ளனர்.
பா.ஜ.,வின் உட்கட்சி பூசல், எங்களுக்கு உதவியாக இருக்கும். வெற்றிக்காக நேர்மையாக போராடுகிறோம். பெண்களை பொருளாதார ரீதியில் பலப்படுத்தும் வாக்குறுதி திட்டங்கள், என்னை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும்.
இவ்வாறு அவர் கூறினார்.

