பிரஜ்வலுக்கு பிரீத்தம் கவுடா ஆதரவு ஹாசனில் கூட்டணி பிரச்னை தீர்ந்தது
பிரஜ்வலுக்கு பிரீத்தம் கவுடா ஆதரவு ஹாசனில் கூட்டணி பிரச்னை தீர்ந்தது
ADDED : ஏப் 11, 2024 05:28 AM

ஹாசன்: “ஹாசனில், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்வேன்,” என, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா கூறினார்.
ஹாசன் லோக்சபா தொகுதி, பா.ஜ., கூட்டணியில் உள்ள, ம.ஜ.த.,வுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கு 'சீட்' கொடுக்க, ஹாசன் பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., பிரீத்தம் கவுடா, ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்தார்.
பிரஜ்வல் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர், அவருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யாமல், பிரீத்தம் கோபத்துடன் இருந்தார். பிரீத்தம் ஆதரவாளர்கள், காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரேயஷ் படேலை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதனால் காங்கிரசுக்கு ஆதரவாக செயல்படுவதாக, பிரீத்தம் மீது ம.ஜ.த., தலைவர்கள் குற்றம் சாட்டினர்.
இதையடுத்து பிரீத்தமிடம், பா.ஜ., மேலிட பொறுப்பாளர் ராதாமோகன் தாஸ்அகர்வால் பேச்சு நடத்திசமாதானப்படுத்தினார்.
இதைத் தொடர்ந்து ஹாசனில் பிரீத்தம் நேற்று அளித்த பேட்டி:
ஹாசனில் போட்டியிடும் பிரஜ்வலுக்கு, பிரதமர் மோடியின் முகத்தை கொடுத்து உள்ளோம். தனிநபர் பிரச்னை விட, கட்சியின் நலன் முக்கியம். ஹாசன் வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்வேன்.
வேட்பாளரின் தந்தை ஹொளேநரசிபுரா எம்.எல்.ஏ.,வாக உள்ளார். அந்த தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை விட, ம.ஜ.த., வேட்பாளருக்கு, எத்தனை ஓட்டுகள் கிடைக்கும் என்று தெரியவில்லை.
ஆனால் ஹொளேநரசிபுராவை விட, ஹாசனில் ம.ஜ.த., வேட்பாளருக்கு, கூடுதல் ஓட்டு வாங்கிக் கொடுப்போம். நான் இப்போது ஹாசன் எம்.எல்.ஏ., இல்லை. ஆனாலும் எனது சக்தியை மீறி, வேலை செய்வேன்.
ஹாசன் மக்கள் புத்திசாலிகள். அவர்களுக்கு யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று தெரியும். இன்று முதல் பிரசாரத்தை ஆரம்பிக்க உள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

