ADDED : ஆக 20, 2024 11:30 PM

ஹாசன் முன்னாள் பா.ஜ., - எம்.எல்.ஏ., பிரீதம் கவுடா. தற்போது அக்கட்சியின் மாநில பொது செயலராக உள்ளார். இவர் எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, முன்னாள் பிரதமர் தேவகவுடா குடும்பத்தை பற்றி பல குற்றச்சாட்டுகளை முன் வைத்தார்.
சமீபத்தில் முன்னாள் எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணா தொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியானதிலும், பிரீதம் கவுடாவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல் வெளியானது. இதனால், அவருக்கும், ம.ஜ.த., தலைவர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது.
குமாரசாமி முரண்டு
சமீபத்தில், 'மூடா' முறைகேடு விஷயத்தில், பா.ஜ., - ம.ஜ.த., இணைந்து நடத்திய மைசூரு பாதயாத்திரைக்கு, தன் ஆதரவு இல்லை என்று மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி, ஆரம்பத்தில் கூறினார்.
பின், பா.ஜ., மேலிடம் அவரை சமாதானப்படுத்தியது. அப்போது, பிரீதம் கவுடா வராமல் இருந்தால் மட்டுமே, தான் ஆதரவு அளிப்பதாக கட்டளை இட்டார். ஆனாலும், இடையிடையே அவர் பங்கேற்றதால், கூட்டணியில் பிரச்னை ஏற்பட்டது.
இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் கவனத்துக்கு, குமாரசாமி கொண்டு சென்றார். இதையடுத்து, பா.ஜ., தேசிய அமைப்பு பொது செயலர் சந்தோஷ், பிரீதம் கவுடாவை தொடர்பு கொண்டு, ம.ஜ.த.,வுடன் இணக்கமாக செல்லும் படி அறிவுறுத்தினார்.
பகிரங்கம்
இந்நிலையில், 'நான் பா.ஜ.,வின் சாதாரண தொண்டன். குமாரசாமி மீது எனக்கு மிகுந்த கவுரவம் உள்ளது. நீண்ட ஆண்டுகள் அரசியலில் இருக்க விரும்புகிறேன். அரசியல் என்பது வெறும் ஒரு மீட்டர் ஓட்டம் அல்ல. இது மாரத்தான் ஓட்டம் என்று என் அரசியல் குரு எடியூரப்பாவின் காலை தொட்டு கூறியுள்ளேன். தேசிய தலைவர்கள் கூட்டணி அமைத்த பின், அது மாநிலம், மாவட்டங்களுக்கும் பொருந்தும்' என்று ஹாசனில் பகிரங்கமாக கூறியுள்ளார்.
இவரது பேச்சை கேட்கும் போது, தன் அரசியல் எதிர்காலத்துக்காக மனம் மாறியுள்ளதாக தெரிகிறது. பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன், குமாரசாமி நெருக்கமாக இருப்பதால், அவருடன் இணக்கமாக சென்றால் மட்டுமே எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்று அவர் நினைப்பதாக கூறப்படுகிறது.
உள்ளாட்சி தேர்தல்
பிரீதம் கவுடாவின் இந்த மனமாற்றத்தை நம்பலாமா அல்லது தன் தனிப்பட்ட லாபத்துக்காக இணக்கமாக இருப்பதாக அடையாளப்படுத்தி கொள்கிறாரா என்று ம.ஜ.த.,வினர் கருதுகின்றனர். விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ள நிலையில், அப்போது இவரது உண்மையான நிலைப்பாடு வெளிப்படலாம்.
ஆனாலும், எந்த காரணத்துக்கும் ம.ஜ.த., தலைவர்கள் குறித்து தவறாகவோ, சர்ச்சைக்குரிய வகையிலோ பேசக்கூடாது என்று பா.ஜ., மேலிடம், வாய்ப்பூட்டு போட்டுள்ளது.
சட்டசபை தேர்தல், லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு ஹாசனில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால், இனி கட்சி வளர்ச்சி பணியில் மும்முரமாக ஈடுபடுவதற்கு முடிவு செய்துள்ளார்.
மாநில பொது செயலராக இருப்பதால், அதை வைத்து மாவட்டம் முழுதும் சுற்றுப்பயணம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளார். குமாரசாமி - பிரீதம் கவுடா இடையேயான கருத்து வேறுபாட்டை, காங்கிரஸ் தலைவர்கள் பலரும் விமர்சனம் செய்தது குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -

