ADDED : ஏப் 17, 2024 05:13 AM
பெங்களூரு : 'கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின், பன்மொழி நடிகர் பிரகாஷ் ராஜ் என்ற கலைஞன் திசை மாறிவிட்டார்' என ம.ஜ.த., குற்றம் சாட்டியது.
இது குறித்து, 'எக்ஸ்' சமூக வலைதலத்தில் ம.ஜ.த., நேற்று கூறியிருப்பதாவது:
கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு வந்த பின், பன்மொழி நடிகர் பிரகாஷ் ராஜ் என்ற கலைஞன், திசை மாறிவிட்டார். இதற்கு பல உதாரணங்கள் உள்ளன.
பிரகாஷ் ராஜின் நிறுவனத்துக்கு, கர்நாடக அரசிடம் இருந்து பெருமளவில் பணம் சென்றுள்ளது. கலைச்சேவையை விட்டு விட்டு, காங்கிரஸ் செய்தி தொடர்பாளராக செயல்படுவதால், அதற்கான பிரதிபலன் கிடைக்கிறது.
மொரார்ஜி தேசாய் உறைவிட பள்ளிகள் மட்டுமின்றி, அரசு மாணவர் விடுதிகளுக்கு நிதியுதவி வழங்க, காங்கிரஸ் அரசுக்கு மனம் வரவில்லை. அங்குள்ள மாணவர்களுக்கு நல்ல உணவில்லை; குடிநீரும் இல்லை.
அரசு நாடக மன்றங்களுக்கு ஒரு பைசா வழங்கவில்லை. ஆனால், பிரகாஷ் ராஜ் உருவாக்கி உள்ள அமைப்புக்கு, அதிகமான நிதி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

