பிரஜ்வல் பாஸ்போர்ட் ரத்து கோரிக்கை: மத்திய அரசிடம் பதில் இல்லை
பிரஜ்வல் பாஸ்போர்ட் ரத்து கோரிக்கை: மத்திய அரசிடம் பதில் இல்லை
ADDED : மே 23, 2024 05:11 AM

பெங்களூரு, : ''எம்.பி., பிரஜ்வலின் துாதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி, நாங்கள் எழுதிய கடிதத்திற்கு, மத்திய அரசிடம் இருந்து பதில் இல்லை,'' என்று, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆபாச வீடியோ வழக்கில் வெளிநாட்டில் உள்ள, எம்.பி., பிரஜ்வலின் துாதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்யும்படி, மத்திய அரசுக்கு முதல்வர் சித்தராமையா கடிதம் எழுதினார்.
சிறப்பு புலனாய்வு குழுவும் கடிதம் எழுதியது. ஆனால் கடிதத்திற்கு இதுவரை மத்திய அரசிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.
பிடிவாரன்ட்
பிரஜ்வலை கைது செய்ய, மத்திய அரசு சட்டப்படி உதவ வேண்டும். பிரஜ்வலுக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
இதனால் அவரது துாதரக பாஸ்போர்ட்டை ரத்து செய்வது, மத்திய அரசின் கடமை.
முன்னாள் முதல்வர் குமாரசாமி எல்லாவற்றிலும் அரசியல் செய்கிறார். சிறப்பு புலனாய்வு குழு தனது அதிகாரத்திற்கு உட்பட்டு வேலையை செய்கிறது.
மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு சீராக உள்ளது என்று, முதல்வரும், நானும் புள்ளி விபரம் வெளியிட்டு உள்ளோம். பா.ஜ., ஆட்சியில் அதிக கொலை நடந்ததாக, புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. இதற்கு பா.ஜ., தலைவர்கள் முதலில் பதில் சொல்லட்டும்.
மேலிட முடிவு
தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு வேண்டும் என்று நீண்ட காலமாக கேட்டு வருகிறோம். தலித் சமூகத்தை சேர்ந்த பட்டதாரிகளுக்கு தகுதி அடிப்படையில் பணி கிடைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளில் திறம்பட செயல்பட, மக்கள் பிரதிநிதிகள் தேவை.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, நீதிமன்ற உத்தரவு எப்போது வேண்டுமானாலும் வரலாம். இதை மனதில் வைத்தே, தேர்தலுக்கு தயாராகுங்கள் என்று, துணை முதல்வர் சிவகுமார் கூறி இருக்கலாம்.
கர்நாடக காங்கிரஸ் தலைவர் மாற்றம் குறித்து, எந்த விவாதமும் நடக்கவில்லை. எல்லாம் மேலிடத்தின் முடிவு. அவர்கள் நினைத்தால் தலைவரை மாற்றலாம். இல்லாவிட்டால் அப்படியே விட்டுவிடலாம்.
இவ்வாறு அவர்கூறினார்.

