காசி விஸ்வநாதர் கோவிலில் அர்ச்சகர் வேடத்தில் போலீசார்: அகிலேஷ் கண்டனம்
காசி விஸ்வநாதர் கோவிலில் அர்ச்சகர் வேடத்தில் போலீசார்: அகிலேஷ் கண்டனம்
UPDATED : ஏப் 12, 2024 10:55 PM
ADDED : ஏப் 12, 2024 10:02 PM

லக்னோ:உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள வாரணாசியில் புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.
இக்கோவிலுக்கு உள்நாட்டில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
இந்த கோவிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீசார், அர்ச்சகர்கள் உடை அணிந்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பான வீடியோவை, முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாதி தலைவருமான அகிலேஷ் யாதவ், சமூக வலைதளத்தில வெளியிட்டார்.
அதில், பெண் போலீசார் காவி நிற சல்வார், குர்தாவும், ஆண் போலீசார் சிவப்பு நிற வேட்டி, ஜிப்பா அணிந்துஉள்ளனர்.
இதுகுறித்து, அகிலேஷ் யாதவ் வெளியிட்ட பதிவு:
போலீசார் அர்ச்சகர் போல் உடை அணிவது எப்படி சரியானதாகும்?
அவ்வாறு உத்தரவு பிறப்பிப்போரை 'சஸ்பெண்ட்' செய்ய வேண்டும்.
இதை சாதகமாகப் பயன்படுத்தி, ஒரு மோசடிக்காரர் பக்தர்களை சூறையாடினால், உ.பி., அரசும், நிர்வாகமும் என்ன பதில் சொல்லும்? இது கண்டிக்கத்தக்கது.இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நடவடிக்கையை நியாயப்படுத்தி, வாரணாசி போலீஸ் கமிஷனர் மோஹித் அகர்வால் கூறுகையில், ''போலீசார் தள்ளினால் பக்தர்கள் வருத்தப்படுவர்.
''இதே காரியத்தை அர்ச்சகர்கள் செய்தால், அவர்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. இதனால், அர்ச்சகர் உடையில் போலீசார் பாதுகாப்பில் உள்ளனர்,'' என்றார்.

