ADDED : ஏப் 22, 2024 07:04 AM

துமகூரு: பெங்களூரு ரூரல் காங்கிரஸ் வேட்பாளரும், எம்.பி.,யுமான சுரேஷ் குறித்து விமர்சித்த முன்னாள் முதல்வர் குமாரசாமி மீது, குப்பி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
துமகூரில் பா.ஜ., வேட்பாளர் சோமண்ணாவை ஆதரித்து குமாரசாமி பிரசாரம் செய்த போது, 'வாக்குறுதி திட்டத்தால், கிராமத்து பெண்கள் வழிதவறி சென்று விட்டனர்' என கூறியிருந்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில், பகிரங்கமாக மன்னிப்பும் கேட்டார்.
இந்நிலையில் மீண்டும் துமகூரில் நேற்று முன்தினம் பிரசாரம் செய்யும் போது, 'பெங்களூரு ரூரல் காங்கிரஸ் வேட்பாளர் சுரேஷ், கோட்வால் ராமசந்திராவின் கும்பலை சேர்ந்தவர். இவரா நாட்டையும், மாநிலத்தையும் காப்பாற்றுவார். அவர்கள் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வர்' என பேசினார்.
வேட்பாளர்களின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் பறக்கும் படை அதிகாரி மகேஷ், ஆட்சேபனைக்கு உரிய வகையில் குமாரசாமி பேசியதாக, குப்பி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். 42வது கூடுதல் சி.எம்.எம்., நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, குமாரசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.
'கோட்வால் ராமசந்திரா' என்பவர், 1970 முதல் 1980 வரை பெங்களூரு வடக்கு ராமசந்திரபுரா பகுதியை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ரவுடி என்பது குறிப்பிடத்தக்கது.

