பெங்., - மைசூரு விரைவு சாலையில் விபத்துகள் குறைந்தன
பெங்., - மைசூரு விரைவு சாலையில் விபத்துகள் குறைந்தன
ADDED : ஜூன் 15, 2024 04:36 AM

பெங்களூரு: பெங்களூரு - மைசூரு விரைவு சாலையில் போக்குவரத்து போலீசாரின் கடுமையான நடவடிக்கையால், விபத்து, பலி எண்ணிகை வெகுவாக குறைந்துள்ளது.
கர்நாடகாவில் கடந்தாண்டு மார்ச்சில் பெங்களூரு - மைசூரு விரைவு சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். சட்டசபை தேர்தல் நெருங்குவதால், அவசர அவசரமாக பணிகள் முடிக்கப்படாமல் விரைவு சாலை திறக்கப்பட்டு உள்ளது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.
பெரும் தலைவலி
அதற்கு ஏற்றபடி, விரைவு சாலை திறப்பதற்கு முன்பும், திறந்த பின்னரும் தினமும் பல விபத்துகள் நடந்து கொண்டே இருந்தன. பலர் உயிரிழந்தனர். இது மாநில அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியது. விபத்தை குறைக்க காரணங்களை கண்டுபிடிக்க, போலீசாருக்கு, அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து மாநில போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு துறை ஏ.டி.ஜி.பி., அலோக் குமார், விரைவு சாலையை ஆய்வு செய்தார். இணைப்பு சாலைகளில் இருந்து வாகனங்கள் வருவது; கண்காணிப்பு கேமரா இல்லாததால் வாகன ஓட்டிகள் குறிப்பிட்ட அளவை விட, அதிவேகமாக வாகனங்களை ஓட்டி செல்வதில் விபத்துகள் ஏற்படுவதை அறிந்தார்.
உடனடியாக, இந்த விரைவு சாலையில் ஆங்காங்கே வாகனங்களின் வேகத்தை கண்டுபிடிக்கும் கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. அதிவேகமாக செல்லும் வாகனங்களின் எண்கள் பதிவு செய்யப்பட்டு, அவர்களின் வீடுகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு வருகின்றன. இதனால் பலரும் இச்சாலையில் போக்குவரத்து விதிகளை மதித்து செல்ல துவங்கி உள்ளனர்.
74,000 வழக்குகள்
கடந்த 28 நாட்களில், போக்குவரத்து விதி மீறியதாக, 74,000க்கும் மேற்பட்ட போக்குவரத்து விதிமீறல் வழக்குகள், கேமராவில் பதிவாகி உள்ளன.
இது தொடர்பாக ஏ.டி.ஜி.பி., அலோக் குமார், தனது 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் குறிப்பிட்டு உள்ளதாவது:
கடந்த 2023 ஜனவரி முதல் மே வரை ஆறு மாதங்களில் 100 பேர் இறந்துள்ளனர்; 2024 ஜனவரி முதல் மே வரை 29 பேர் மட்டுமே இறந்துள்ளனர். எஸ்.பி., - சர்க்கிள் இன்ஸ்பெக்டர்களின் தொடர் முயற்சிக்கு கிடைத்த பரிசாக இதை நினைக்கிறோம். ஒன்றாக பயணித்து பெங்களூரு - மைசூரு நெடுஞ்சாலையை மரணம் இல்லா பகுதியாக மாற்றுவோம்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
2023ல் நடந்த விபத்துகள்
மாதம் விபத்து பலி காயம்
ஜனவரி 13 14 53
பிப்ரவரி 14 17 56
மார்ச் 19 20 58
ஏப்ரல் 16 20 76
மே 25 29 58
மொத்தம் 87 100 301
2024ல் நடந்த விபத்துகள்
மாதம் விபத்து பலி காயம்
ஜனவரி 9 10 42
பிப்ரவரி 4 6 18
மார்ச் 8 8 33
ஏப்ரல் 4 4 40
மே 3 3 34
மொத்தம் 28 31 167
படம்: பெங்களூரு - மைசூரு விரைவு சாலை - கோப்பு படம்.

