ADDED : ஏப் 11, 2024 05:36 AM

பெங்களூரு: சொத்து ஆவணங்களை சமர்ப்பிக்கும்படி, துணை முதல்வர் சிவகுமாருக்கு, லோக் ஆயுக்தா நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில், அவர் மீது சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்ய, முந்தைய பா.ஜ., அரசு அனுமதி அளித்தது. வழக்குப்பதிவு செய்து, சி.பி.ஐ., விசாரணை நடத்தி வந்தது.
இந்நிலையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர், சிவகுமாரிடம் விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு அளிக்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்பட்டது. அவரிடம் விசாரணை நடத்த லோக் ஆயுக்தாவுக்கு, அரசு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில், சி.பி.ஐ., மனு செய்தது. அதன் மீது விசாரணை நடந்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க, சிவகுமாருக்கு, லோக் ஆயுக்தா நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
சி.பி.ஐ.,யிடம் தாக்கல் செய்த, சொத்து ஆவணங்களை தங்களிடம் சமர்ப்பிக்கும்படி, நோட்டீசில் குறிப்பிடப்பட்டு உள்ளது. லோக்சபா தேர்தல் நெருங்கி உள்ள நிலையில், லோக் ஆயுக்தா நோட்டீஸ் அனுப்பி இருப்பது, சிவகுமாருக்கு நெருக்கடி ஏற்படுத்தி உள்ளது.

