3 மாதங்களாக அமலுக்கு வராத 'ஒன் சிட்டி ஒன் ரேட்' திட்டம்
3 மாதங்களாக அமலுக்கு வராத 'ஒன் சிட்டி ஒன் ரேட்' திட்டம்
ADDED : மே 14, 2024 04:26 AM
பெங்களூரு: கர்நாடகா முழுதும் அனைத்து டாக்சிகளிலும் 'ஒன் சிட்டி ஒன் ரேட்' திட்டத்தில் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க உத்தரவிட்டு, மூன்று மாதங்களாகியும் அமல்படுத்தப்பட வில்லை.
பெங்களூரு நகரில் இயக்கப்படும் டாக்சிகளுக்கு நிலையான கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. விமான நிலைய டாக்சிகள் தவிர, செயலி அடிப்படையிலான டாக்சிகள், தங்கள் விருப்பப்படி கட்டணம் வசூலிக்கின்றன.
இதுவே மழைக்காலத்தில் டாக்சிகளை பயணியர் அதிகளவில் பதிவு செய்தால், கட்டணத்தை 40 முதல் 50 ரூபாய் வரை அதிகரித்து விடுகின்றனர்.
இதுபோன்று பல புகார்கள் பொதுமக்களிடம் இருந்து வருகின்றன. இதைத் தடுக்கும் வகையில், கர்நாடகாவில் அனைத்து டாக்சிகளிலும் 'ஒன் சிட்டி ஒன் ரேட்' திட்டத்தின் கீழ், ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்க பிப்., 3ம் தேதி போக்குவரத்துத் துறை கட்டணம் நிர்ணயித்து உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவின்படி, நகர எல்லைக்குள் சாதாரண சேவை வழங்கும் அனைத்து டாக்சிகள், ஆப்ஸ் அடிப்படையில் சேவை வழங்கும் டாக்சிகள் ஒரே கட்டணத்தை வசூலிக்க வேண்டும்' உத்தரவிடப்பட்டிருந்தது.
ஆனால், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 100 நாட்களாகியும், அதை அமல்படுத்த போக்குவரத்துத் துறை முன்வரவில்லை. சில செயலி அடிப்படையிலான டாக்சி ஓட்டுனர்கள், நேரத்துக்கு ஏற்ப பல்வேறு கட்டணங்கள் வசூலித்து, பயணியரை மிரட்டி பணம் பறிப்பது தொடர்கிறது.
'ஒன் சிட்டி ஒன் ரேட்' திட்டம் அமல்படுத்தாதது குறித்து போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'சில செயலி அடிப்படையிலான சேவை நிறுவனங்கள், இத்திட்டம் தொடர்பாக நீதிமன்றத்தை நாடி உள்ளன. அனைத்தும் இம்மாத இறுதிக்குள் சரி செய்யப்பட்டு, இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்' என்றனர்.
பாரத் டிரான்ஸ்போர்ட் சங்க குழு தலைவர் ஜெயண்ணா கூறியதாவது:
நகர டாக்சிகள், பயணியரிடம் அதிக கட்டணம் வசூலிப்பதை நிறுத்த, போக்குவரத்துத் துறை இத்திட்டத்தை செயல்படுத்த உள்ளது. ஆனால், இத்திட்டம் 100 நாட்களாகியும் இன்னும் அமல்படுத்தப்படவில்லை.
இதை போக்குவரத்து அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால் செயலி அடிப்படையிலான சேவைகளை வழங்கும் ஒருங்கிணைப்பாளர்கள், பயணியரிடம் அதிக கட்டணம் வசூலிக்கின்றனர். இதை தடுக்க இத்திட்டம் விரைவில் அமல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

