ADDED : ஏப் 11, 2024 05:13 AM
மாமனாரின் செல்வாக்கு மற்றும் நிழலில் மருமகன்கள் லோக்சபா தேர்தலை சந்திக்கின்றனர். மாமனாரின் நிழலில் மருமகன் தேர்தலில் போட்டியிடுவது, காங்கிரசில் புதிய விஷயமல்ல. கட்சியின் செல்வாக்குமிக்க தலைவர்களுக்கும், லோக்சபா தேர்தலுக்கும் மிகவும் நெருங்கிய தொடர்பு உள்ளது.
காங்கிரசின் வீரேந்திர பாட்டீல் கடந்த 1980ல் கலபுரகி எம்.பி.,யாக இருந்தார். இவர், தன் மருமகனும், இ.என்.டி., அறுவை சிகிச்சை நிபுணருமான பி.ஜி.ஜவளியை, தொகுதியில் களமிறக்கினார்.
மாமனாரின் நிழலில் கலபுரகி தொகுதியில் களமிறங்கிய இவர், மூன்று தேர்தல்களில் போட்டியிட்டார். 1989, 1991ல் வெற்றி பெற்றார்; 1998ல் தோல்வி அடைந்தார். வீரேந்திர பாட்டீலின் மகளை திருமணம் செய்த ஜவளி, கலபுரகியில் டாக்டராக தொழில் செய்தவர். இவர் மீது மாமனார் வைத்திருந்த அதிகமான அன்பு, ஜவளியை இரண்டு முறை எம்.பி.,யாக்கியது.
கடந்த 1997, மார்ச் 14ல் வீரேந்திர பாட்டீல் காலமானார். அதன்பின் 1998ல் நடந்த லோக்சபா தேர்தலில், ஜவளிக்கு காங்கிரஸ் சீட் கொடுத்தது. ஆனால், மாமனார் இல்லாமல், மூன்றாவது முறை அவரால் வெற்றி பெற முடியவில்லை. அதன்பின் அவர் தேர்தலை திரும்பியே பார்க்கவில்லை.
இம்முறை லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, தன் மருமகன் ராதா கிருஷ்ணாவை, கலபுரகி தொகுதியில் களமிறக்கியுள்ளார். இவர் கார்கேவின் மூத்த மகள் டாக்டர் ஜெயஸ்ரீயின் கணவர்.
தொழிலதிபரான ராதா கிருஷ்ணா, இதுவரை திரைமறைவில் இருந்து மாமனாரின் வெற்றிக்காக பணியாற்றினார்; கட்சியை பலப்படுத்தினார். இப்போது முதன் முறையாக, தேர்தல் களத்தில் இறங்கியுள்ளார்.
இவரை வெற்றி பெற வைக்க, கார்கே முயற்சிக்கிறார்.
அதேபோன்று, பெங்களூரு ரூரல் தொகுதியில், முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மருமகன் பிரபல இதய சிகிச்சை நிபுணர் மஞ்சுநாத், பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரை வெற்றி பெற வைக்க பா.ஜ., - ம.ஜ.த., தலைவர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர்
.
- நமது நிருபர் -

