ஒரே மேடையில் மோடி, தேவகவுடா பங்கேற்பு தொண்டர்கள் அதிருப்தியை சரி செய்ய பா.ஜ., 'பிளான்'
ஒரே மேடையில் மோடி, தேவகவுடா பங்கேற்பு தொண்டர்கள் அதிருப்தியை சரி செய்ய பா.ஜ., 'பிளான்'
ADDED : மார் 23, 2024 11:08 PM
பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியால், தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட அதிருப்தியை சரி செய்வதில், பா.ஜ., மேலிடம் ஆர்வம் காண்பிக்கிறது. மைசூரில் பிரதமர் நரேந்திர மோடி, ம.ஜ.த., முன்னாள் பிரதமர் தேவகவுடாவை ஒரே மேடையில் தோன்றும்படி, பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்ய, பா.ஜ., ஆலோசிக்கிறது.
இம்முறை லோக்சபா தேர்தலில், பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணி அமைத்துக் கொண்டு, ஆளுங்கட்சியை எதிர்கொள்ள தயாராகின்றன. தலைவர்கள் அளவில் எதிர்ப்பு கிளம்பவில்லை. ஆனால் இரண்டு கட்சிகளின் தொண்டர்களுக்கும் கூட்டணியில் உடன்பாடு இல்லை.
இத்தனை ஆண்டுகள் அரசியல் ரீதியில், எதிராளிகளாக மோதினோம். இப்போது திடீரென கை கோர்த்து பணியாற்றுங்கள் என்றால், அது முடியுமா என, கேள்வி எழுப்புகின்றனர்.
இதற்கிடையே ம.ஜ.த., செல்வாக்குள்ள தொகுதிகளுக்கு, கட்சியுடன் ஆலோசிக்காமல் பா.ஜ., வேட்பாளர்களை அறிவித்ததும், ம.ஜ.த.,வுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன், குமாரசாமி பகிரங்கமாக எரிச்சலை தெரிவித்தார்.
அதன்பின் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, மாநில பா.ஜ., தேர்தல் பொறுப்பாளர் ராதா மோகன் தாஸ் ஆகியோர், குமாரசாமியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, சமாதானம் செய்ய முயற்சித்தனர்.
மூன்று தொகுதிகளுக்கும், ம.ஜ.த., இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. பா.ஜ., வேட்பாளர்களை அறிவித்த தொகுதிகளில், ம.ஜ.த., தொண்டர்கள் பிரசாரத்துக்கு செல்லவில்லை. இவர்களை தொகுதி பா.ஜ., தலைவர்கள் அழைக்கவும் இல்லை. இரண்டு கட்சிகளின் தொண்டர்களின் அதிருப்தியை சரி செய்து, ஒருங்கிணைப்பு ஏற்படுத்த பா.ஜ., திட்டம் வகுத்துள்ளது.
மைசூரில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா ஒரே மேடையில் தோன்றும் வகையில், பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்ய பா.ஜ., ஆலோசிக்கிறது. இதய அறுவை சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள குமாரசாமி, அங்கிருந்து திரும்பிய பின், இவருடன் கலந்து ஆலோசித்து பொதுக் கூட்ட தேதி முடிவு செய்யப்படும். மேலும் ஊடகத்தினர் சந்திப்பு நடத்துவது குறித்தும் ஆலோசிக்கிறது.
ஹாசன், ராம்நகரில் பிரதமர் மோடி பிரம்மாண்ட ஊர்வலம் நடத்த வாய்ப்புள்ளது.
கர்நாடகாவுக்கு வருகை தரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, குமாரசாமியின் வீட்டுக்கு செல்லவும் திட்டமிட்டுள்ளார். இவரது நம்பிக்கையை பெற முயற்சிப்பார்.
- நமது நிருபர் -

