ADDED : மே 20, 2024 04:49 AM
சிக்கமகளூரு, : ''சிக்கமகளூரில் டெங்கு அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்,'' என சுகாதாரத்துறை அதிகாரி அஸ்வத் பாபு தெரிவித்தார்.
சிக்கமகளூரில் நேற்று அவர் கூறியதாவது:
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த, தேவையான நடவடிக்கை எடுத்துள்ளோம். நகர்ப்புறங்கள், கிராமப்புறங்களில் ஆய்வு நடத்தப்படும். கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை, அடையாளம் காண்போம். கொசு உற்பத்தியை அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆரம்ப சுகாதார மையம் அளவில், தாலுகா, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்படும். அந்தந்த பகுதிகளில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படும். டெங்கு அறிகுறி இருந்தால் சிகிச்சை அளிக்க வேண்டும். மாவட்ட, தாலுகா ஆரம்ப சுகாதார மையங்களில், கம்பூஷியா மீன் வளர்ப்பு தொட்டிகள் கட்டப்படும்.
மீன் குஞ்சுகளை வளர்த்து, ஏரி, குளம், திறந்தவெளி கிணறுகள், விவசாய குளம், கல்குவாரிகள் என, மற்ற நீர்நிலைகளில் விடப்படுகிறது. இந்த மீன்கள், கொசுக்களை அழிக்கும்.
இதுவரை கிராம பஞ்சாயத்து அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், 357 இடங்களை அடையாளம் கண்டு, 2022ல், 623 இடங்களில் மீன் குஞ்சுகள், 2023ம் ஆண்டில் 2,948 இடங்களில் மீன் குஞ்சுகள் விடப்பட்டன.
தற்போது சிக்கமகளூரில் 79 பேர், தரிகெரேவில் 10 பேர், கடூரில் ஆறு, என்.ஆர்.புராவில் இரண்டு, கொப்பாவில் ஐந்து, மூடிகெரேவில் இரண்டு பேருக்கு டெங்கு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

