யோகேஸ்வருக்கு 'சீட்' கேட்போம்: எதிர்க்கட்சி தலைவர் அசோக் அதிரடி
யோகேஸ்வருக்கு 'சீட்' கேட்போம்: எதிர்க்கட்சி தலைவர் அசோக் அதிரடி
ADDED : ஆக 27, 2024 06:36 AM

பெங்களூரு: “சென்னப்பட்டணா இடைத்தேர்தலில் யோகேஸ்வருக்கு சீட் கேட்டு, கட்சி மேலிடத்திடம் கோரிக்கை வைப்போம்,” என, எதிர்க்கட்சித் தலைவர் அசோக் கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
சென்னப்பட்டணா தொகுதிக்கு நடக்க இருக்கும் இடைத்தேர்தல் குறித்து, எம்.எல்.சி., யோகேஸ்வருடன் நானும், அஸ்வத் நாராயணாவும் ஆலோசித்தோம். போட்டியிட்டால் வெற்றி பெறுவேன் என, அவர் உறுதியுடன் கூறினார். அவருக்கு சீட் வழங்க வேண்டும் என, கட்சி மேலிடத்திடம் நாங்கள் கோரிக்கை வைப்போம்.
சிறையில், நடிகர் தர்ஷனுக்கு சகல வசதியும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும். மாநிலத்தில் சட்டம் -- ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது.
காற்றுக்கு வரி
'மூடா' வால்மீகி மேம்பாட்டு ஆணையத்தில் நடந்த ஊழலில் அரசு சிக்கி தவிக்கிறது. ஆட்சியை தக்கவைக்க காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு வழி தெரியவில்லை. இதனால் வாய்க்கு வந்ததை பேச ஆரம்பித்துள்ளனர்.
காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களிடம் 100 கோடி ரூபாய் பேரம் பேசிய பா.ஜ., தலைவர்கள் யார் என்பதை ரவி கனிகா கூறவேண்டும். வாக்குறுதித் திட்டங்களால் தங்கள் தொகுதிக்கு நிதி கிடைப்பதில்லை என, ஆளுங்கட்சி எம்.எல். ஏ.,க்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.
குடிநீர், பஸ் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை ஏற்கனவே உயர்ந்துவிட்டது.
நாம் சுவாசிக்கும் காற்றுக்கு கூட வரி விதித்தால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மீண்டும் ஆட்சிக்கு வரமாட்டோம் என தெரிந்துள்ளதால், அமைச்சர்கள் முடிந்த வரை கொள்ளை அடிக்கப் பார்க்கின்றனர்.
'லவ் ஜிகாத்'
உடுப்பியில் இளம்பெண்ணுக்கு போதை பொருள் கொடுத்து பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியில், பலாத்காரம் சர்வ சாதாரணமாக நடக்கிறது. குற்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு பயமே இல்லை. கேரளாவில் லவ் ஜிகாத் மையம் செயல்படுகிறது.
ஹிந்து இளம்பெண்களை காதல் போர்வையில் ஏமாற்றி, எப்படி மதமாற்றம் செய்ய வேண்டும் என பயிற்சி அளிக்கப்படுகிறது.
வரும் 2047ம் ஆண்டுக்குள் இந்தியாவை முஸ்லிம் நாடாக மாற்றும் முயற்சி நடந்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

