குமாரசாமி மீண்டும் முதல்வர் ஆவார்! அடித்து சொல்கிறார் அப்பா தேவகவுடா
குமாரசாமி மீண்டும் முதல்வர் ஆவார்! அடித்து சொல்கிறார் அப்பா தேவகவுடா
ADDED : ஏப் 02, 2024 11:19 PM

ஹாசன் : ''என்ன தந்திரம், போராட்டங்கள் செய்தாலும், மாநிலத்தில் குமாரசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார்,'' என, ம.ஜ.த., முன்னாள் பிரதமர் தேவகவுடாதெரிவித்தார்.
ஹாசன் மாவட்டம், கட்டாயாவில் நேற்று கட்சிப் பிரமுகர்களுடன் கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி: கடந்த 1991ல் நடந்த லோக்சபா தேர்தலில் என்னை 33,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர்.
இம்மாவட்ட மக்களை, நான் என்றும் மறக்கமாட்டேன். அதுமட்டுமின்றி, கட்டாயா பேரூராட்சியில் எனக்கு 15,000 ஓட்டுகள் அதிகமாக கிடைத்தன.
நான் பிரதமராக இருந்தபோது, கட்டாயா பகுதி மக்களுக்காக 'யாகசி நீர்த்தேக்கம்' கட்டப்பட்டது. இம்மாவட்டத்தின் 45,000 ஏக்கர் நிலங்கள் பயன்பெற வேண்டிய தண்ணீர், முந்தைய அரசால், சிக்கமகளூருக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனால் இப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இங்கு தொழிற்சாலை கொண்டுவர வேண்டும் என்று சிலர் கருத்து தெரிவித்துஉள்ளனர்.
நான் இன்னும் இரண்டரை ஆண்டுகள், ராஜ்யசபாஎம்.பி.,யாக இருப்பேன். எனது பதவி காலத்துக்குள் இங்கு தொழிற்சாலை அமைத்து, உள்ளூர் மக்களுக்கு உதவுவேன்.
'பிரஜ்வல் ரேவண்ணாவை தோற்கடிப்பேன்' என, முதல்வர் சித்தராமையா கூறி வருகிறார். ஆனால், 1991ல் என்னை வெற்றி பெற வைத்தது போன்று, பிரஜ்வலையும் வெற்றி பெறவைக்க வேண்டும்.
என்ன தந்திரம், போராட்டம் நடத்தினாலும், மாநிலத்தில் குமாரசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்பார். இதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

