ஜூன் 4க்கு பிறகு கார்கே பதவி விலகுவார்: அமித்ஷா ஆரூடம்
ஜூன் 4க்கு பிறகு கார்கே பதவி விலகுவார்: அமித்ஷா ஆரூடம்
UPDATED : மே 27, 2024 05:46 PM
ADDED : மே 27, 2024 02:55 PM

லக்னோ: தோல்விக்கு பொறுப்பு ஏற்று, ஜூன் 4ம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
உத்தரபிரதேச மாநிலம் குஷிநகர் மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: அடுத்த 5 ஆண்டுகளுக்கு நரேந்திர மோடியை பிரதமராக்க நாட்டு மக்கள் முடிவு செய்துள்ளனர்.
தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி உறுதியானது. ஜூன் 4ம் தேதி காங்கிரஸ் எம்.பி ராகுல் செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தி மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் சரியில்லை என குறை கூறுவார். தோல்விக்கு பொறுப்பு ஏற்று, ஜூன் 4ம் தேதிக்கு பிறகு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதவி விலகுவார்.
திமிர்பிடித்தவர்கள்
ராகுல் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெற முடியாது. அகிலேஷூக்கு 4 தொகுதிகளில் கூட வெற்றி கிடைக்காது. எங்கள் ஆட்சிக் காலத்தில் 20 சர்க்கரை ஆலைகளை மீண்டும் துவங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இண்டியா கூட்டணியினர் திமிர்பிடித்தவர்கள். முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தருவோம் என கூறியுள்ளனர். அவர்கள் வெற்றி பெற்றால், பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் மக்களின் இடஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்குவார்கள்.
இட ஒதுக்கீடு
ஆனால் கவலைப்பட வேண்டாம். அவர்கள் வெற்றி பெற மாட்டார்கள். நாங்கள் அதை நடக்க விட மாட்டோம். நரேந்திர மோடி ஆட்சியில் இருக்கும் வரை பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டை யாராலும் பறிக்க முடியாது. இந்த நாட்டில் மத அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க அனுமதிக்க மாட்டோம்.
பாகிஸ்தானிடம் அணுகுண்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி கூறுகிறது. ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் அணுகுண்டுக்கு பயப்படலாம், நாங்கள் பயப்படவில்லை. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுக்கு சொந்தமானது. அதை நாங்கள் மீட்போம். இவ்வாறு அவர் பேசினார்.

