மகனுக்கு சிபாரிசு செய்யாத மல்லப்பா ஒரே நேரத்தில் எம்.பி.,யான வினோதம்
மகனுக்கு சிபாரிசு செய்யாத மல்லப்பா ஒரே நேரத்தில் எம்.பி.,யான வினோதம்
ADDED : ஏப் 05, 2024 11:00 PM

கல்யாண கர்நாடகா அரசியல் அபூர்வமானது. தந்தை, மகன் ஒரே நேரத்தில் பார்லிமென்ட்டுக்குள் நுழைந்த வரலாறு, கல்யாண கர்நாடகாவுக்கு உள்ளது.
சுதந்திர போராட்ட வீரரும், காந்தியவாதியுமான கொல்லுார் மல்லப்பா, மறைந்த பிரதமர் இந்திராவுக்கு மிகவும் நெருக்கமானவர். 1968, 1974, 1984ல், கொல்லுார் மல்லப்பா ராஜ்யசபா உறுப்பினராக இருந்தார். இவரது மகன் ராஜசேகர், 1977ல் ராய்ச்சூர் லோக்சபா தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்றார்.
இருவரும் எம்.பி.,
கட்சியில் தந்தை மல்லப்பா, குல்பர்கா மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும், மகன் ராஜசேகர் முதன்மை செயலராகவும் இருந்தனர். அதேபோன்று தந்தை ராஜ்யசபா எம்.பி.,யாகவும், மகன் லோக்சபா எம்.பி.,யாகவும் இருந்தனர். அப்போது யாத்கிர், கலபுரகி மாவட்டத்தில் இருந்தது. அதன்பின் யாத்கிர் தனி மாவட்டமாக உருவானது.
யாத்கிர் மாவட்டத்தின் ஷஹாபுரா, சுரபுரா, யாத்கிர் தாலுகாக்கள், ராய்ச்சூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்டது. யாத்கிரியின் பொகலாபுராவை சேர்ந்த மல்லப்பா, ஆரம்பத்தில் ஆடு மேய்த்தார். அதன்பின் கம்பளி வியாபாரம் செய்தார். கட்டுமான ஒப்பந்ததாரர் ஆனார்.
காந்தியின் துாண்டுதலால், சுதந்திர போராட்ட வீரரானார். 1942ல் மும்பையில் நடந்த காங்கிரஸ் மாநாட்டுக்கு சென்ற, ஹைதராபாத் கர்நாடகா இப்போது கல்யாண கர்நாடகா பகுதியின், முதல் நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறையில் அடைப்பு
'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்திலும் மல்லப்பா பங்கேற்றார். இதற்காக இவரை 1942ல் நிஜாம் அரசு கைது செய்தது. சிறையில் இருந்து விடுதலையான பின், விமோச்சனா போராட்டத்தில் பங்கேற்றதால், மீண்டும் கைதாகி, கலபுரகி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க கூட அனுமதி அளிக்கவில்லை.
கடந்த 1953 முதல் 1957 வரை, காங்கிரசின் சுர்புர் எம்.எல்.ஏ.,வாக இருந்தார். 1954ல் ஹைதராபாத் காங்., தலைவராக இருந்தார்.
நேரு தலைமையில் நடந்த காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்றபோது, மல்லப்பாவுக்கு, நேருவின் அறிமுகம் கிடைத்தது. 1957ல் சேடம் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.,வானார். வாழ்க்கையின் இறுதி நாட்களில், குஷ்ட நோயாளிகளுக்கு தொண்டு செய்தார்.
பொதுவாக தந்தை பதவியில் இருந்தால், தன் மகனை எம்.எல்.ஏ.,வாக்க, எம்.பி.,யாக்க பல சர்க்கஸ்களை செய்வர். ஆனால் மல்லப்பா, மாறுபட்ட அரசியல்வாதி. இவரை, 'கர்நாடக காந்தி' என்றே அழைத்தனர். பதவிக்கு ஆசைப்படவில்லை. தனக்கு சீட் கிடைக்க, இந்திராவிடம் சிபாரிசு செய்யும்படி, மல்லப்பாவிடம், மகன் ராஜசேகர் மன்றாடினார். ஆனால், மல்லப்பா சம்மதிக்கவில்லை.
அதன்பின் ராஜசேகர், தன் சொந்த முயற்சியால் காங்., சீட் பெற்று, 1977ல் லோக்சபா தேர்தலில் ராய்ச்சூர் தொகுதியில் களமிறங்கி வெற்றி பெற்று எம்.பி.,யானார். 1984ல் தந்தை மல்லப்பா, குல்பர்கா காங்., தலைவராகவும், மகன் ராஜசேகர் கட்சியின் மாவட்ட முதன்மை செயலராகவும் இருந்தனர்.
மல்லப்பா 2004 அக்டோபர் 24ல், தன் 99வது வயதில் காலமானார்
- நமது நிருபர் -.

