'குமாரசாமிக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது நானும் இருந்தேன்'
'குமாரசாமிக்கு அறுவை சிகிச்சை நடந்தபோது நானும் இருந்தேன்'
ADDED : மார் 31, 2024 11:15 PM

ராம்நகர்: ''முன்னாள் முதல்வர் குமாரசாமிக்கு, இதய அறுவை சிகிச்சை நடக்கும் போது, நானும் அங்கிருந்தேன். இதய அறுவை சிகிச்சை குறித்து தெரிந்து கொள்ள, அதிக அறிவு வேண்டும்,'' என பா.ஜ., வேட்பாளர் டாக்டர் மஞ்சுநாத் தெரிவித்தார்.
ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாராமிக்கு, சமீபத்தில் சென்னையில் இதய அறுவை சிகிச்சை நடந்தது. இது குறித்து, ஸ்ரீரங்கபட்டணா காங்கிரஸ் எம்.எல்.ஏ., பன்டி சித்தேகவுடா, 'தேர்தல் நடக்கும் போது, குமாரசாமிக்கு இதய பிரச்னை ஏற்படும். தேர்தல் நேரத்தில் மருத்துவமனையில் சேர்வது வழக்கம். மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன மூன்றே நாட்களில், மாநிலத்தை சுற்றுவார்.
'அமைச்சர் செலுவராயசாமிக்கும் இதேபோன்ற இதய பிரச்னை உள்ளது. ஆனால், இவர் மருத்துவமனையில் சேர்ந்தால், மாதக்கணக்கில் வெளியே வருவதில்லை. ஆனால் குமாரசாமி இரண்டே நாட்களில் வெளியே வருகிறார். இந்த புது டெக்னிக் என்ன என்பது தெரியவில்லை' என விமர்சித்தார்.
இவரை ம.ஜ.த., மட்டுமின்றி, பா.ஜ., தலைவர்களும் கண்டித்தனர்.
இது குறித்து, இதய வல்லுநரும், பெங்களூரு ரூரல் தொகுதி பா.ஜ., வேட்பாளருமான மஞ்சுநாத் நேற்று கூறியதாவது:
சில டாக்டர்களுக்கும், இதய அறுவை சிகிச்சை குறித்து அவ்வளவாக தெரியாது. இத்தகைய நிலையில், சாதாரண மக்களுக்கு எப்படி தெரியும். குமாரசாமிக்கு இதய அறுவை சிகிச்சை நடந்த போது, நானும் அங்கிருந்தேன். இதய அறுவை சிகிச்சை குறித்து, தெரிந்து கொள்ள 13 ஆண்டுகள் படிக்க வேண்டும்.
குமாரசாமிக்கு அதிநவீன முறையில் அறுவை சிகிச்சை நடந்தது. எந்த தகவலும் தெரியாமல், பேச கூடாது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, எப்ரல் 2ல் தேர்தல் பிரசாரத்துக்கு வருகிறார். ஊர்வலம் நடத்துவார். பெங்களூரில் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்பார். அவரது வருகை எங்களுக்கு புதிய பலத்தை அளிக்கும்.
ஏப்ரல் 4ல், நான் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். அன்று காலை 11:00 மணிக்கு, கலெக்டர் அலுவகத்தில் வேட்புமனு தாக்கல் செய்வேன். இரண்டு கட்சிகளின் தலைவர்கள், தொண்டர்கள் அதிக எண்ணிக்கையில் வருவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

