'நான் பயங்கரவாதி அல்ல' சிறையில் இருந்து செய்தி அனுப்பிய கெஜ்ரிவால்
'நான் பயங்கரவாதி அல்ல' சிறையில் இருந்து செய்தி அனுப்பிய கெஜ்ரிவால்
ADDED : ஏப் 17, 2024 01:27 AM
புதுடில்லி, 'என் பெயர் அரவிந்த் கெஜ்ரிவால். நான் பயங்கரவாதி அல்ல' என்ற செய்தியை, திஹார் சிறையில் இருந்தபடி, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பி உள்ளதாக, ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.
டில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசால் அமல்படுத்தப்பட்ட, மதுபான கொள்கையில் ஊழல் நடந்ததாக எழுந்த புகாரை அடுத்து, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
கண்டனம்
இந்த ஊழலில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்றம் குறித்து தனியாக வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறையினர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை, கடந்த மாதம் 21ல் கைது செய்தனர்.
தற்போது அவர், நீதிமன்றக் காவலில் டில்லி திஹார் சிறையில் உள்ள அறை எண் - 2ல் அடைக்கப்பட்டு உள்ளார்.
சிறையில் இருந்தபடியே, டில்லி அரசு நிர்வாகம் தொடர்பான உத்தரவுகளை, அரவிந்த் கெஜ்ரிவால் பிறப்பித்து வருகிறார். இதற்கு பா.ஜ.,வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், மதுபான கொள்கை வழக்கில் கைது செய்யப்பட்டு, ஆறு மாத சிறைவாசத்துக்கு பின், சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்த, ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங், டில்லியில் நேற்று கூறியதாவது:
போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளுக்கு, தங்கள் குடும்பத்தினரை சந்திக்க எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படுவதில்லை.
வீடியோ கான்பரன்ஸ்
ஆனால், ஆதாரம் இல்லாமல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சமீபத்தில், அவரை சந்திக்க பஞ்சாப் முதல்வர் பகவந்த் சிங் மான் சென்றார்.
கண்ணாடி அறையில் அரவிந்த் கெஜ்ரிவாலை அவர் சந்தித்தார். சிறையில் பயங்கரவாதியை நடத்துவது போல், அரவிந்த் கெஜ்ரிவாலை நடத்தி வருகின்றனர்.
'என் பெயர் அரவிந்த் கெஜ்ரிவால். நான் பயங்கரவாதி அல்ல' என்ற செய்தியை சிறையில் இருந்தபடி அவர் அனுப்பி உள்ளார். விரைவில் அவர் வெளியே வருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, 'என் ரத்த சர்க்கரை அளவு ஏற்ற, இறக்கமாக உள்ளது. வழக்கமாக சிகிச்சை பெறும் டாக்டரிடம் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை பெற அனுமதிக்க வேண்டும்' என, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை நேற்று விசாரித்த சிறப்பு நீதிபதி ராகேஷ் சியால், இது குறித்து நாளைக்குள் பதிலளிக்கும்படி, அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டார்.

