தெரிஞ்ச விஷயத்தை திரும்பச் சொல்வதற்கு ஆணையம் எதற்கு: கேரளாவில் எழுந்தது கிடுக்கிப்பிடி கேள்வி
தெரிஞ்ச விஷயத்தை திரும்பச் சொல்வதற்கு ஆணையம் எதற்கு: கேரளாவில் எழுந்தது கிடுக்கிப்பிடி கேள்வி
ADDED : ஆக 21, 2024 07:23 AM

திருவனந்தபுரம்: 'திரையுலகில் பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட குற்றவாளிகளின் பெயர் இல்லாமல் ஹேமா கமிஷன் அறிக்கை முழுமை அடையாது' என பிரபல மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப் தெரிவித்தார்.
கமிட்டி அறிக்கை
'மலையாள திரையுலகில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிக அளவில் நடக்கின்றன. சமரசம் செய்து கொள்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்புகள் கிடைக்கின்றன; மறுப்பவர்கள் வெளியேற்றப்படுகின்றனர்' என, நீதிபதி ஹேமா கமிட்டி அளித்துள்ள அறிக்கை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்த அறிக்கையில் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டுகள் உள்ளன. குற்றம் சாட்டுபவர் வாக்குமூலம் மட்டுமே உள்ளது; தவறு செய்தவர்களின் பெயர் விவரம் எதுவும் இல்லை.
முழுமை இல்லை
இது தொடர்பாக, பிரபல மலையாள எழுத்தாளர் சாரா ஜோசப் கூறியதாவது: குற்றவாளியின் பெயர் இல்லாமல் ஹேமா கமிஷன் அறிக்கை முழுயடையாது. அறிக்கையில் குற்றங்களுக்கு காரணமானவர்கள் பற்றி எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை. மக்களுக்கு நன்கு தெரிந்த விஷயங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
குற்றவாளிகள் குறித்து தகவல்கள் இல்லாமல், அந்த அறிக்கை வைத்து நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. பெயர்கள் மறைக்கப்பட்டால் நீதிமன்றமோ அல்லது அரசாங்கமோ எப்படி நடவடிக்கை எடுக்க முடியும்? இதனால் சட்ட நடவடிக்கை சாத்தியமற்றது.
உடனடி நடவடிக்கை
சினிமா துறையில் கறுப்பு பணம், மது, போதைப்பொருள் மற்றும் பாலியல் சீண்டல் ஆகியவை நமக்கு தெரிந்த பிரச்னை தான். அதற்கு காரணமான மாபியா கும்பல் குறித்து அறிக்கை தகவல் தெரிவிக்க தவறிவிட்டது. இந்தப் பிரச்னைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர வேண்டியது அரசின் கடமை. குற்றங்கள் நடந்திருந்தால், நீதிமன்றங்களும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
மவுனம் ஏன்?
திரையுலகில் தொடர்புடைய அமைச்சர்கள், எம்.பி.,க்கள் கூட இந்த விஷயத்தில் தங்கள் பொறுப்பை மீறி மவுனம் காத்து வருகின்றனர். மலையாள திரைப்பட கலைஞர்கள் சங்கம் குற்றவாளிகளை அடையாளம் காண வேண்டும். இதற்கு ஆறுதல் மற்றும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தால் போதாது. இந்த குற்றங்களுக்கு தீர்வு காண உறுதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

