ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கிய ஜி.எஸ்.டி., ஆணையர்
ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கிய ஜி.எஸ்.டி., ஆணையர்
ADDED : மே 18, 2024 11:49 PM

ஆமதாபாத்: குஜராத்தைச் சேர்ந்த ஜி.எஸ்.டி., ஆணையர் சந்திரகாந்த் வால்வி, மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தையே விலைக்கு வாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மஹாராஷ்டிராவின் நந்துார்பர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்திரகாந்த் வால்வி. இவர் தற்போது குஜராத்தின் ஆமதாபாதில் ஜி.எஸ்.டி., ஆணையராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், மஹாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தின், மகாபலேஷ்வர் நகர் அருகே உள்ள ஜடானி என்ற கிராமத்தை, தன் குடும்பத்தினருடன் சேர்ந்து, ஜி.எஸ்.டி., ஆணையர் சந்திரகாந்த் வால்வி விலைக்கு வாங்கி உள்ளார்.
இந்த கிராமத்தின் மொத்த பரப்பளவு, 620 ஏக்கர். ஜடானி கிராமத்தின் நிலப்பகுதிகளை அரசு கையகப்படுத்தப் போவதாகக் கூறி, அக்கிராம மக்களை ஏமாற்றி, ஜி.எஸ்.டி., ஆணையர் சந்திரகாந்த் வால்வி வாங்கியுள்ளது தெரிய வந்துள்ளது.
இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு பதவியை தவறாக பயன்படுத்தி, ஒரு கிராமத்தையே அரசு அதிகாரி விலைக்கு வாங்கியுள்ளது, தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

