எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியை எச்சரித்த பஞ்சுருளி தெய்வம்
எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியை எச்சரித்த பஞ்சுருளி தெய்வம்
ADDED : ஜூலை 29, 2024 04:46 AM

மங்களூரு, : அடுத்த 3 ஆண்டுகள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னியை, பஞ்சுருளி தெய்வம் எச்சரித்து உள்ளது.
தார்வாட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., வினய் குல்கர்னி. கடந்த 2017 ல் தார்வாட் சப்தாபுராவில் நடந்த, பா.ஜ., மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் யோகேஷ் கவுடா கொலை வழக்கில், வினய் குல்கர்னி கைது செய்யப்பட்டார். கொலை வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது.
தார்வாட் செல்ல கூடாது என்ற நிபந்தனையுடன், அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் கொடுத்தது.
தார்வாட் செல்லாமலேயே சட்டசபை தேர்தலில், வினய் குல்கர்னி வெற்றி பெற்றார்.
தார்வாடில் வளர்த்து வரும் கால்நடைகளை பராமரிக்க வேண்டும் என்பதால், அங்கு செல்ல அனுமதி கேட்டு, வினய் குல்கர்னி தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
இந்நிலையில் மங்களூரு தொக்கோடு சந்திப்பில் உள்ள, கோரகஜ்ஞா கோவிலில் நேற்று முன்தினம் நடந்த பூத கோள திருவிழாவில், வினய் குல்கர்னி தனது குடும்பத்தினருடன் பங்கேற்றார்.
அப்போது பஞ்சுருளி தெய்வத்திடம் சென்று அருள் வாக்கு கேட்டார்.
'உனக்கு நேரம் சரி இல்லை. அடுத்த மூன்று ஆண்டுகள் எச்சரிக்கையுடன் இரு. உனது பிரச்னைக்கு ஒரு பெண் தான் காரணம். உனக்கு வரும் பிரச்னைகளை நான் பார்த்து கொள்கிறேன்' என்று, வினய் குல்கர்னியிடம் பஞ்சுருளி தெய்வம் கூறி உள்ளது.

