பிரம்மனே வந்தாலும் பின்வாங்க மாட்டேன்! போட்டி வேட்பாளர் ஈஸ்வரப்பா அடம்
பிரம்மனே வந்தாலும் பின்வாங்க மாட்டேன்! போட்டி வேட்பாளர் ஈஸ்வரப்பா அடம்
ADDED : மார் 23, 2024 11:15 PM
ஷிவமொகா: “லோக்சபா தேர்தலுக்கு பின், கர்நாடகாவில் பல அரசியல் மாற்றங்கள் நடக்கும். என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை, பொறுத்திருந்து பாருங்கள்,” என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஈஸ்வரப்பா தெரிவித்தார்.
ஷிவமொகாவில் நேற்று அவர் கூறியதாவது:
எனக்கு போன் செய்து, தங்கள் வேட்பாளர் குறித்து காங்கிரசாரே அதிருப்தித் தெரிவிக்கின்றனர். கீதா சிவராஜ்குமார் 'டம்மி' வேட்பாளர். எடியூரப்பாவும் கூட, டம்மி வேட்பாளரை அழைத்து வந்ததாக, நான் கூறவில்லை. வேறு சிலர் கூறுகின்றனர்.
ஷிகாரிபுரா, வருணா தொகுதிகளில் உள் ஒப்பந்தம் செய்து கொண்டு, தன் மகனை எடியூரப்பா வெற்றி பெற வைத்தார். அதேபோன்று இப்போதும், உள் ஒப்பந்த அரசியல் செய்ய முற்பட்டுள்ளனர்.
லோக்சபா தேர்தலுக்கு பின், மாநிலத்தில் பல அரசியல் மாற்றங்கள் நடக்கும். என்ன மாற்றங்கள் நடக்கும் என்பதை, பொறுத்திருந்துபாருங்கள்.
என் உடலில் பா.ஜ., ரத்தம் பாய்கிறது. கட்சி என் தாய் போன்றது. தாயிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது. ஷிவமொகாவில் ராகவேந்திராவை தோற்கடித்தால், எடியூரப்பா குடும்பத்தின் 30 சதவீதம் செல்வாக்கு குறையும். ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து விடுபடும்.
அதன்பின் விஜயேந்திரா மாநில தலைவர் பதவியை இழப்பார். வேண்டுமானால் எடியூரப்பா ஒருவர் மட்டும், தேசிய அரசியலில் இருக்கட்டும்.
காங்கிரசில் பலர் என்னை தொடர்பு கொண்டு, நீங்கள் சுயேச்சையாக போட்டியிடுங்கள். நாங்கள் ஓட்டுப் போடுகிறோம் என்றனர். அதேபோன்று ம.ஜ.த.,வினரும் போன் செய்கின்றனர். ஷிவமொகா லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, அனைத்து சட்டசபை தொகுதிகளுக்கும் சென்றேன். எனக்கு இவ்வளவு ஆதரவு கிடைக்கும் என, நான் எதிர்பார்க்கவில்லை.
எந்த காரணத்தை கொண்டும், தேர்தலில் இருந்து பின் வாங்காதீர்கள் என, தினமும் எனக்கு நுாற்றுக்கணக்கானோர் போன் செய்கின்றனர். சிட்டிங் எம்.பி., மீது அதிருப்தியில் உள்ளனர்.
ஷிவமொகாவின் மல்லேஸ்வரம் நகரில் மார்ச் 28ல், பிரசாரத்தை துவக்குகிறேன். மூத்தவர்கள், சுமங்கலி பெண்கள் சம்பிரதாய முறைப்படி, பிரசாரத்தை துவக்கி வைப்பர்.
நான் யாரையும் 'பிளாக்மெயில்' செய்யும் நோக்கில், தேர்தலில் போட்டியிடவில்லை. எனக்கு நெருக்கடி வந்துள்ளதால் போட்டியிடுகிறேன். 27 தொகுதிகளில் பா.ஜ., வெற்றி பெற வேண்டும். காங்கிரஸ் தோற்க வேண்டும். நான் தேர்தலில் வெற்றி பெற்ற, இரண்டு மாதங்களுக்கு பின் பா.ஜ.,வில் இணைவேன். பிரம்மன் வந்தாலும் என் முடிவை மாற்ற மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

