தேர்தல் பணியில் அலட்சியம் கூடாது! எம்.எல்.ஏ., ரூபகலாவுக்கு சிவகுமார் 'டோஸ்'
தேர்தல் பணியில் அலட்சியம் கூடாது! எம்.எல்.ஏ., ரூபகலாவுக்கு சிவகுமார் 'டோஸ்'
ADDED : ஏப் 09, 2024 06:35 AM
தங்கவயல்: அலட்சியம் காட்டாமல் தேர்தல் பணியில் ஈடுபட வேண்டுமென, தங்கவயல் தொகுதி எம்.எல்.ஏ., ரூபகலாவை மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் எச்சரித்துள்ளார்.
கோலார் லோக்சபா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, எட்டு சட்டசபைத் தொகுதிகளிலும் தீவிர பிரசாரம் செய்ய வேண்டுமென, மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
கோலார் லோக்சபா தேர்தலில் நேற்று முன்தினம் முல்பாகல் குருடுமலே கணபதி கோவிலில் பூஜை செய்துவிட்டு, தேர்தல் பிரசாரத்தை முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் துவக்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் தங்கவயல் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, அவரது தந்தை அமைச்சர் முனியப்பா பங்கேற்கவில்லை.
முனியப்பா பதில்
'என்னை யாரும் அழைக்கவில்லை; அதனால் செல்லவில்லை. மேலும் சிக்கபல்லாப்பூர் தொகுதி பொறுப்பாளராக இருப்பதால், அங்கு செல்கிறேன்' என, முனியப்பா தெரிவித்தார். ஆனால், ரூபகலா ஏதும் தெரிவிக்கவில்லை.
கோலார் மாவட்டத்திற்கு மாநில முதல்வர், காங்கிரஸ் தலைவர் வருவது தெரிந்தும் அவர் வராமல் இருந்ததால் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, அவருக்கு, “தேர்தல் பிரசாரத்திற்கு நேரில் வந்து அழைக்க வேண்டுமா? கட்சி மிகப் பெரியது என்று வார்த்தைகளில் கூறுவது முக்கியமல்ல. காங்கிரஸ் வேட்பாளர் வெற்றிக்கு பாடுபட வேண்டும். அலட்சியமாக இருக்க கூடாது. அலட்சியமாக இருந்தால் கட்சி உரிய நடவடிக்கை எடுக்கும்,” என, மாநில தலைவர் சிவகுமார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
அவசர ஆலோசனை
இதன் காரணமாக நேற்று, அவசர அவசரமாக கட்சியினரை அழைத்து ரூபகலா ஆலோசனை நடத்தினார். தேர்தல் பணிகள் வேகப்படுத்த நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதித்தார்.
கூட்டம் குறித்து தலைவர்கள் கூறியதாவது:
தங்கவயல் நகராட்சி திடலில் வரும் 12ம் தேதி தேர்தல் பிரசார கூட்டம் நடக்க உள்ளது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், வேட்பாளர் கவுதம் மற்றும் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
அதிக தொண்டர்களை சேர்க்க முன்னாள் நகராட்சித் தலைவர்கள் கே.சி.முரளி, முனிசாமி, ரமேஷ் ஜெயின், சீனிவாசன் மற்றும் நந்தகுமார் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு வார்டிலும் இருந்தும் 100 பேரை அழைத்து வர வேண்டும். கூட்டம் நடக்கும் மைதானம் முழுதும் கொடிகள், தோரணங்கள் கட்டுவதற்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

