பா.ஜ., - காங்., நிர்வாகிகளுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
பா.ஜ., - காங்., நிர்வாகிகளுக்கு தேர்தல் கமிஷன் எச்சரிக்கை
ADDED : ஏப் 01, 2024 11:54 PM

புதுடில்லி: பெண்களை அவமதிக்கும் வகையில் அவதுாறான கருத்துகளை வெளியிட்ட பா.ஜ.,வைச் சேர்ந்த திலீப் கோஷ் மற்றும் காங்கிரசின் சுப்ரியா ஸ்ரீநாத் ஆகியோருக்கு தலைமை தேர்தல் கமிஷன் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுதும் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடக்க உள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் பா.ஜ., சார்பில் களமிறக்கப்பட்டுள்ள பிரபல ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் குறித்து காங்கிரசின் சமூக ஊடக பிரிவு தலைவர் சுப்ரியா ஸ்ரீநாத் சமீபத்தில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவிட்டுஇருந்தார்.
புகார்
பெண்களை இழிவுபடுத்தும் விதமாக கருத்து வெளியிட்டது தொடர்பாக பா.ஜ., சார்பில் தேர்தல் கமிஷனில் புகாரளிக்கப்பட்டது.
அதேபோல் மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜியின் பிறப்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பா.ஜ., நிர்வாகி திலீப் கோஷ் சமீபத்தில் பேசியிருந்தார். இது குறித்து தேர்தல் கமிஷனிடம் திரிணமுல் காங்., புகார் அளித்திருந்தது.
இந்நிலையில், சுப்ரியா மற்றும் திலீப் கோஷுக்கு தேர்தல் கமிஷன் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளது.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும், நம் சமூகத்தில் பெண்களுக்கு மிக உயர்ந்த மரியாதை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய அரசியலமைப்பு மற்றும் நாட்டின் அனைத்து நிறுவனங்களும் பெண்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பின்பற்றி வருகின்றன.
தேர்தல் கமிஷனும் இந்த விஷயத்தில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
பெண்களின் அந்தஸ்து மேம்பட நடத்தப்பட்டு வரும் தேர்தல் பிரசாரங்களில் அவர்களின் பெருமை சீரழிவதை கமிஷன் ஒருபோதும் அனுமதிக்காது.
கண்காணிக்கப்படும்
எனவே, அரசியல் கட்சியின் தலைவர்களும், அதன் நிர்வாகிகளும் பொதுவெளியில் பேசும்போது மிகவும் கவனமுடன் பேசுவது அவசியம். தேர்தல் நடத்தை விதிகளை மீறாமல் இருக்க வேண்டும்; தரக்குறைவாக பேசுவதை தவிர்க்க வேண்டும்.
அவ்வாறு மீறுபவர்களுக்கு கட்சி தலைமை உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். அவதுாறான கருத்துக்களை வெளியிட்டதால், திலீப் கோஷ் மற்றும் சுப்ரியாவின் பேச்சுகள் இனி தொடர்ந்து மிகவும் கவனமுடன் கண்காணிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

