ஈ.டி., விசாரணைக்கு ஆஜராக மஹுவாவுக்கு மீண்டும் சம்மன்
ஈ.டி., விசாரணைக்கு ஆஜராக மஹுவாவுக்கு மீண்டும் சம்மன்
ADDED : மார் 28, 2024 02:03 AM

புதுடில்லி, திரிணமுல் காங்கிரஸ் லோக்சபா வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மற்றும் தொழிலதிபர் ஹிராநந்தானி ஆகியோருக்கு எதிராக, 'பெமா' எனப்படும், அன்னிய செலாவணி மோசடி வழக்கில், இன்று விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை புதிதாக சம்மன் அனுப்பி உள்ளது.
மேற்கு வங்கத்தில் இருந்து திரிணமுல் காங்கிரஸ் சார்பில் லோக்சபா எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹுவா மொய்த்ரா.
இவர், பிரதமர் மோடி மற்றும் அதானி குழுமத்தை குறிவைத்து பார்லிமென்ட் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்ப, தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் லஞ்சம் வாங்கியதாக, பா.ஜ., - எம்.பி., நிஷிகாந்த் துபே கடந்த ஆண்டு குற்றஞ்சாட்டினார்.
இந்த விவகாரம் குறித்து விசாரித்த பார்லி., ஒழுங்கு நடவடிக்கை குழு அவரை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைத்தது. இதன்படி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மஹுவா மொய்த்ராவின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. தற்போது இந்த வழக்கை சி.பி.ஐ., விசாரிக்கிறது.
இதற்கிடையே, லோக்சபா தேர்தலில் மஹுவா மொய்த்ராவுக்கு மீண்டும் மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகரில் போட்டியிட மம்தா பானர்ஜி வாய்ப்பு வழங்கியுள்ளார்.
இந்நிலையில் மஹுவா மொய்த்ராவுக்கு வெளிநாட்டு கணக்குகளில் இருந்து பணப்பரிவர்த்தனை நடந்ததாக பெமா எனப்படும் அன்னியச் செலாவணி மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிந்துள்ளது.
இந்த வழக்கில், மஹுவா மொய்த்ரா மற்றும் துபாய் வாழ் தொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானி ஆகியோர் விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராகும்படி அமலாக்கத் துறை நேற்று புதிதாக சம்மன் அனுப்பியுள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் மஹுவா மறுத்துள்ளார்.

