எல்லை விவகாரம் தொடர்பாக சீனாவுடன் சுமுக பேச்சு: ராஜ்நாத்
எல்லை விவகாரம் தொடர்பாக சீனாவுடன் சுமுக பேச்சு: ராஜ்நாத்
ADDED : ஏப் 29, 2024 06:32 AM

ஆமதாபாத் : ''எல்லை பிரச்னை தொடர்பாக சீனாவுடன் நடத்தும் பேச்சு, நல்ல சூழலில் சுமுகமாக உள்ளது; இந்தியா ஒரு போதும் எதிரிகளுக்கு தலை வணங்காது,” என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
குஜராத்தில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று பிரசாரம் செய்தார். ஆமதாபாதில் நேற்று அவர் கூறியதாவது:
நம் நாடு பலவீனமானது அல்ல. ராணுவ ரீதியாக நாம் சக்தி வாய்ந்த நாடாக மாறியுள்ளோம். அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவே விரும்புகிறோம். இந்தியா - சீனா இடையிலான பிரச்னைகளை தீர்க்க, நல்ல சூழலில் சுமுக பேச்சு நடந்து வருகிறது. அந்த பேச்சின் முடிவுக்காக நாம் காத்திருக்க வேண்டியது அவசியம்.
நாம், இதுவரை எங்கும் தலை வணங்கியது இல்லை. இனியும் ஒருபோதும் தலை வணங்க மாட்டோம் என்பதை நாட்டு மக்களுக்கு உறுதியாக கூறுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

