தர்ஷனுக்காக எங்களிடம் வராதீர்கள்! கையை விரித்த இரண்டு அமைச்சர்கள்
தர்ஷனுக்காக எங்களிடம் வராதீர்கள்! கையை விரித்த இரண்டு அமைச்சர்கள்
ADDED : ஜூன் 19, 2024 04:49 AM

பெங்களூரு ; 'கொலை வழக்கில் கைதாகி உள்ள, நடிகர் தர்ஷனை எங்களால் காப்பாற்ற முடியாது. தயவுசெய்து உதவி கேட்டு எங்களிடம் வராதீர்கள்' என, இரண்டு அமைச்சர்கள் கைவிரித்துள்ளனர்.
சித்ரதுர்காவைச் சேர்ந்த ரசிகரான ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா கவுடா உட்பட 18 பேரை, பெங்களூரு அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரேணுகாசாமியை கொலை செய்தபின், மைசூரு டி.நரசிப்பூரில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு தர்ஷன் சென்றதும், அங்கு இரவில் தங்கிவிட்டு, மறுநாள் காலை மைசூரு சென்று, நட்சத்திர ஹோட்டலில் தங்கியதும் விசாரணையில் தெரிய வந்தது.
மைசூரில் விசாரணை
இதனால் தர்ஷனை மைசூரு அழைத்துச் சென்று விசாரிக்க போலீசார் தயாராகினர். ஆனால் அவரை பார்க்க அதிக ரசிகர்கள் வருவர்.
ஏதாவது பிரச்னை ஏற்படும் என்று கருதி, கொலை வழக்கில் கைதான பவன், நாகராஜ், நந்தீஷ், தீபக், லட்சுமண் ஆகிய ஐந்து பேரை மட்டும், மைசூரு நட்சத்திர ஹோட்டலுக்கு நேற்று அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.
ரேணுகாசாமியை கொன்ற பின்னர், இந்த ஹோட்டலில் வைத்து தான் தர்ஷனுடன், கைதானவர்கள் ஆலோசனை நடத்தி உள்ளனர். இதனால் அங்கு சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கூடிய விரைவில் பண்ணை வீட்டிற்கு அழைத்துச் சென்று, தர்ஷனிடமும் விசாரணை நடத்த போலீசார் தயாராகி வருவதாக சொல்லப்படுகிறது.
முதல்வர் உத்தரவு
நேற்று மாலை, கொலை நடந்த பட்டணகரே ஷெட்டிற்கு, தர்ஷன் உள்ளிட்ட கொலையாளிகளை அழைத்துச் சென்று போலீசார் விசாரித்தனர்.
இதற்கிடையில், 'இந்த வழக்கிலிருந்து தர்ஷனை எப்படியாவது காப்பாற்றுங்கள்' என, அவர் தரப்பில் சிலர், இரண்டு அமைச்சர்களிடம் பேச்சு நடத்தி உள்ளனர்.
'சாதாரண வழக்காக இருந்தால் நாங்கள் காப்பாற்றுவோம். இது கொலை வழக்கு. இந்த வழக்கில் அடுத்து என்ன நடக்கும் என, ஒட்டுமொத்த மாநிலமே எதிர்பார்த்துள்ளது.
தர்ஷனுக்கு உதவி செய்தால், எங்கள் பெயருக்கு களங்கம் ஏற்படும். தர்ஷன் வழக்கில் தலையிட வேண்டாமென, முதல்வர் சித்தராமையா எங்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இதனால் எங்களிடம் தயவுசெய்து, உதவி கேட்டு வராதீர்கள்' என, இரண்டு அமைச்சர்களும் கையை விரித்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விஷயம் அறிந்ததும் தர்ஷன் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
அலட்சியம்
ரேணுகாசாமியை கொலை செய்த பின்னர், அவரது உடலை அப்புறப்படுத்துவது குறித்து, ஒரு எஸ்.ஐ.,யிடம் கொலையாளிகள் பேசியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனால் விசாரணைக்கு ஆஜராகுமாறு அந்த எஸ்.ஐ.,க்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு குறித்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா நேற்று அளித்த பேட்டி:
ரேணுகா சாமி கொலை வழக்கில் இதுவரை 18, 20 பேர் கைது செய்யப்பட்டு இருப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிடுகின்றன. ஆனால் 17 பேர் தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் 10 பேரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. அவர்களை வழக்கில் சாட்சியாக சேர்க்கும் வாய்ப்புள்ளது.
சற்று அலட்சியமாக இருந்திருந்தாலும் இந்த வழக்கு, வேறு விதமாக திசை திரும்பி இருக்கும். இந்த வழக்கை, விஜயநகர் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சித்ரதுர்கா, மைசூரு, பெங்களூரில் விசாரணை நடந்துள்ளது. வழக்கு விசாரணையில் இருப்பதால் மேற்கொண்டு எதுவும் பேச இயலாது.
இவ்வாறு அவர் கூறினார்.
படங்களை பார்க்க மாட்டேன்
நான் நடிகர் தர்ஷன் தீவிர ரசிகர். எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம், அவர் நடித்த திரைப்படங்கள் பார்ப்பேன். ஆனால் அவர் இவ்வளவு கொடூரமாக கொலை செய்துள்ளார். இனி என் வாழ்நாளில், அவர் நடித்த திரைப்படங்களை பார்க்கவே மாட்டேன்.
பேலுார் கோபாலகிருஷ்ணா,
காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஷிவமொகா சாகர்
பவித்ராவுக்கு உடல்நலக் குறைவு
ரேணுகாசாமி கொலை வழக்கில் கைதாகி உள்ள பவித்ரா கவுடா, பெண்கள் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். விசாரணைக்கு தேவைப்படும்போது, அன்னபூர்ணேஸ்வரி நகர் போலீஸ் நிலையம் அழைத்து வரப்படுகிறார்.
நேற்று அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. போலீசார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்தனர். சிகிச்சை முடிந்ததும் மீண்டும் பாதுகாப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
தர்ஷனை உசுப்பேற்றிய பவித்ரா
ரேணுகாசாமி ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியது பற்றி, தர்ஷனுக்கு தெரியக்கூடாது என, முதலில் பவித்ரா கவுடா நினைத்தார். ரேணுகாசாமி ஆபாச குறுந்தகவல் அனுப்பியது பற்றி தெரிந்தவுடன், தர்ஷன் எதுவும் செய்யவில்லை.
இதையடுத்து தர்ஷனிடம் சென்று, 'நீ எல்லாம் பெரிய ஸ்டாரா? எனக்கு ஒருவன் ஆபாசமாக குறுந்தகவல் அனுப்பியுள்ளார். இது பற்றி தெரிந்தும் நீ அமைதியாக இருக்கிறாய். இதுதான் நீ என் மீது காட்டும் அக்கறையா?' என்று கேட்டு, பவித்ரா கவுடா தகராறு செய்துள்ளார்.
அதன்பின் தர்ஷனுடன் 20 நாட்கள் பேசாமல் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஏற்பட்ட கோபத்தில் ரேணுகாசாமியை, பெங்களூரு வரவழைத்து தர்ஷன் கொலை செய்தது தெரிந்துள்ளது.
அமைச்சர்கள் ஆறுதல்
கொலையான ரேணுகாசாமி வீட்டிற்குச் சென்ற சித்ரதுர்கா மாவட்ட பொறுப்பு அமைச்சர் டி.சுதாகர், உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் ஆகியோர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். பா.ஜ., தலைவர் விஜயேந்திராவும் ஆறுதல் கூறினார். 2 லட்சம் ரூபாய்க்கான காசோலை கொடுத்தார்.
ரவுடிகளுடன் தொடர்பு
தர்ஷனின் மொபைல் போனை கைப்பற்றிய போலீசார், அவரது மொபைல் தொடர்பு பட்டியலில் யார் பெயரெல்லாம் உள்ளது என, ஆய்வு செய்தனர். அப்போது போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பெங்களூரு நகரில் முக்கிய ரவுடிகள் சிலருடன், தர்ஷன் அடிக்கடி மொபைல் போனில் பேசியது தெரிந்தது. சமூக வலைதளங்களில் தன்னை விமர்சிப்பவர்களை, ரவுடிகளை ஏவி, தர்ஷன் மிரட்டியதும் தெரியவந்துள்ளது.
பழைய வழக்கு திறப்பு?
மைசூரு டி. நரசிப்பூர் பண்ணை வீட்டில் சட்டவிரோதமாக வனவிலங்குகளை தர்ஷன் வளர்ப்பதாக, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, வனத்துறையினர் கண்டறிந்தனர். அப்போது பண்ணை வீட்டிலிருந்து நான்கு பட்டை தலை வாத்துகள் மீட்கப்பட்டன.
இதுகுறித்து வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால் தர்ஷனிடம் விசாரணை நடத்தாமல், அந்த வழக்கை அப்படியே விட்டுவிட்டனர். தற்போது கொலை வழக்கில் தர்ஷன் கைதாகி இருப்பதால், சட்டவிரோதமாக பட்டை தலை வாத்துகள் வளர்த்த வழக்கு குறித்தும் விசாரணை நடத்த, வனத்துறையினர் தயாராகி வருகின்றனர்.
தர்ஷன் வீடு இடிப்பு?
பெங்களூரு ஆர்.ஆர்., நகரில் தர்ஷன் வீடு உள்ளது. சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து அந்த வீடு கட்டப்பட்டு இருப்பதாக முன்பு குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் தர்ஷனுக்கு அரசியல்வாதிகளின் தொடர்பு இருந்ததால், அந்த வீட்டின் மீது, மாநகராட்சி அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது விமர்சனத்திற்கு உள்ளானது. தற்போதும் அந்த வீடு குறித்து சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து துணை முதல்வர் சிவகுமார் நேற்று அளித்த பேட்டியில், ''சாக்கடை கால்வாயை ஆக்கிரமித்து தர்ஷன் வீடு கட்டியிருப்பது உறுதி செய்யப்பட்டால், மாநகராட்சி அதிகாரிகள் சட்டப்படி நடவடிக்கை எடுப்பர்,'' என்று கூறினார்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளுடன் அவர் ஆலோசனையும் நடத்தியதாக சொல்லப்படுகிறது.
மேலாளர் தொடர்பு?
பெங்களூரு ரூரலில் தர்ஷனுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது. இந்தப் பண்ணை வீட்டில் ஸ்ரீதர், 35, என்பவர் மேலாளராக இருந்தார். நான்கு மாதங்களுக்கு முன்பு, அவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
மரண கடிதத்தில், 'எனது சாவுக்கு நானே காரணம். தயவு செய்து போலீசார் யாரிடமும் விசாரணை நடத்த வேண்டாம். எனது சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் அளித்தாலும், அந்த புகாரை ஏற்றுக்கொள்ள வேண்டாம்' என்று எழுதியிருந்தார்.
இதனால் அந்த வழக்கு குறித்து எதுவும் விசாரிக்காமல் போலீசார் விட்டுவிட்டனர். தற்போது ஸ்ரீதர் தற்கொலைக்கு, தர்ஷன் எதுவும் அழுத்தம் கொடுத்தாரா என்றும் விசாரிக்க உள்ளனர்.
தொடர் மாயங்கள்
தர்ஷனிடம் கதக்கை சேர்ந்த மல்லிகார்ஜுன் என்பவர் மேலாளராக வேலை செய்தார். நான்காண்டுகளுக்கு முன்பு, மனைவி தேஜஸ்வினிக்கு, மல்லிகார்ஜுன் ஒரு கடிதம் எழுதினார். 'எனக்கு கடன் தொல்லை அதிகரித்துவிட்டது. நான் எங்கேயாவது செல்கிறேன். என்னை காணவில்லை என போலீசில் புகார் அளிக்க வேண்டாம். பணம் சம்பாதித்துக் கொண்டு திரும்ப வருவேன்' என்று கூறியிருந்தார். அதன் பின்னர் அவர் மாயமானார். அவர் உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று கூட தெரியாமல் இருந்தது.
கொலை வழக்கில் தர்ஷன் கைதானதும், மாயமான மல்லிகார்ஜுன் குறித்தும் போலீசார் விசாரித்தனர். இந்த விசாரணையில் அவர், கோவாவில் தலைமறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது. கூடிய விரைவில் கோவா சென்று, அவரை அழைத்துவர போலீசார் தயாராகி வருகின்றனர்.
� விசாரணைக்காக நடிகர் தர்ஷன் அழைத்து வரப்பட்டதை அறிந்து தனியார் ஹோட்டல் முன் குவிந்த அவரது ரசிகர்கள். இடம்: மைசூரு. � கொல்லப்பட்ட ரேணுகாசாமி குடும்பத்தினருக்கு மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா,� அமைச்சர் டி.சுதாகர் ஆகியோர் ஆறுதல் கூறி, நிவாரணத் தொகை வழங்கினர். இடம்: சித்ரதுர்கா.

