ADDED : ஏப் 23, 2024 05:04 AM
பெங்களூரில் லோக்சபா தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. வீடுகள், மார்க்கெட், கிளப், கோவில்கள், ஹோட்டல் உட்பட, அனைத்து இடங்களிலும், லோக்சபா தேர்தல் குறித்து காரசார விவாதங்கள் நடக்கின்றன.
லோக்சபா தேர்தலின், முதற்கட்ட தேர்தலுக்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. ஓட்டுப்பதிவுக்கு 48 மணி நேரத்துக்கு முன், அதாவது நாளை மாலையுடன் பகிரங்க பிரசாரம் ஓய்வதால், அந்தந்த கட்சிகளின் வேட்பாளர்கள், தலைவர்கள், தொண்டர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு, பகல் பாராமல், கொளுத்தும் வெயிலை பொருட்படுத்தாமல் பிரசாரம்செய்கின்றனர்.
அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பொது மக்களும் கூட தேர்தலை பற்றியே பேசுகின்றனர். மார்க்கெட்டுகளில் வியாபாரிகள், வாடிக்கையாளர்கள், மெட்ரோ ரயில்கள், நிலையங்கள், பஸ் நிலையங்கள், கோவில்கள், மார்க்கெட்டுகள், ஷாப்பிங் மால்கள், நிறுவனங்கள், பூங்காக்கள் என, அனைத்து இடங்களிலும் தேர்தலை பற்றி விவாதிக்கின்றனர். இம்முறை எந்த தொகுதியில், யார் வெற்றி பெறுவார்கள், யாருக்கு வெற்றி வாய்ப்புள்ளது என, காரசாரமாக பேசுவதை கேட்கமுடிகிறது.
தினமும் மாலையில் கிளப்களில் சந்தித்து பேசும் நண்பர்களும் கூட, தேர்தலை பற்றி ஆர்வத்துடன் பேசுகின்றனர். பொதுவாக பெரும்பாலான வேட்பாளர்கள், தினமும் காலையில் கோவில், பிரார்த்தனை மையங்களில் இருந்தே, பிரசாரத்தை துவக்குகின்றனர். வேண்டுதல் வைக்கின்றனர். சிலர் பூங்காவில் நடைபயிற்சி செய்யும் போதே, பொது மக்களை சந்தித்து ஓட்டு கேட்கின்றனர்.
- நமது நிருபர் -
