மம்தா குறித்து சர்ச்சை கருத்து திலிப் கோஷுக்கு கண்டனம்
மம்தா குறித்து சர்ச்சை கருத்து திலிப் கோஷுக்கு கண்டனம்
ADDED : மார் 27, 2024 12:50 AM

கோல்கட்டா, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து, சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த பா.ஜ., - எம்.பி., திலிப் கோஷுக்கு, ஆளும் திரிணமுல் காங்., கண்டனம் தெரிவித்தது.
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு வரும் 19ம் தேதி துவங்கி, ஜூன் 1 வரை, ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கவுள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., சார்பில், மேதினிபூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற அக்கட்சி மூத்த தலைவரும், எம்.பி.,யுமான திலிப் கோஷ், இந்த முறை, பர்தமான் துர்காபூர் தொகுதியில் களமிறக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், 'கோவாவுக்கு சென்றால் கோவாவின் மகள் என, மம்தா பானர்ஜி கூறுகிறார். திரிபுராவுக்கு சென்றால், திரிபுராவின் மகள் என கூறுகிறார். முதலில், உங்கள் தந்தை யார் என்பதை முடிவு செய்யுங்கள். யாருடைய மகளாகவும் இருப்பது நல்லதல்ல' என, திலிப் கோஷ் கூறுவது போன்ற வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
திலிப் கோஷுக்கு கண்டனம் தெரிவித்து, திரிணமுல் காங்., நிர்வாகி குணால் கோஷ் கூறியதாவது:
பெண்களை அவமரியாதை செய்வதே, பா.ஜ.,வின் உண்மையான குணம். தற்போது அது மீண்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதற்கு வரும் தேர்தலில், நாட்டின் பெண்கள் பதிலடி கொடுப்பர்.
மேதினிபூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட, திலிப் கோஷுக்கு பா.ஜ., வாய்ப்பு வழங்கவில்லை. இந்த விரக்தியால், முதல்வர் மம்தா பானர்ஜியை குறிவைத்து அவர் இழிவாக பேசி உள்ளார்.
மம்தா பானர்ஜி, ஏழு முறை எம்.பி.,யாகவும், நான்கு முறை மத்திய அமைச்சராகவும், மூன்று முறை முதல்வராகவும் உள்ளார். அவர் உலகம் முழுதும் பிரபலமானவர். இந்தியாவின் மகள் அவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

