தேவகவுடா குடும்பத்துக்கு பெங்களூரை சுற்றிலும் 1,000 ஏக்கர் சொத்து: சிவகுமார்
தேவகவுடா குடும்பத்துக்கு பெங்களூரை சுற்றிலும் 1,000 ஏக்கர் சொத்து: சிவகுமார்
ADDED : ஏப் 16, 2024 05:47 AM

மைசூரு : ''பெங்களூரை சுற்றிலும் 1,000 ஏக்கரில் தேவகவுடா குடும்பத்துக்கு சொத்து உள்ளது,'' என துணை முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
மைசூரில் நடந்த ஒக்கலிகதலைவர்கள் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
பா.ஜ.,வில் நமக்கு வாய்ப்பில்லை. ம.ஜ.த., இனி ஜெயிக்க முடியாது. வாய்ப்பு உங்கள் வீட்டு வாசலுக்கு வந்துள்ளது. எனவே எங்களுக்கு பலத்தை அளிக்க வேண்டும்.
இங்கு 47 ஆண்டுகளுக்கு பின், ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு சீட் கொடுத்து உள்ளோம்.
எங்கள் வேட்பாளர் விவசாய குடும்ப பின்னணியில் இருந்து வந்த ஒரு சாதாரண தொழிலாளி. அவரை வெற்றி பெற செய்யும் பொறுப்பு, நமக்குள்ளது. பா.ஜ.,வின் பிரதாப் சிம்ஹா, சதானந்த கவுடாவுக்கு அக்கட்சி ஏற்கனவே, 'செய்தி' கொடுத்துள்ளது. அவர்களுடன் ம.ஜ.த., கூட்டணி வைத்துள்ளதை புரிந்து கொள்ள வேண்டும்.
நான் வளரக்கூடாது
நான் வளர்ந்து விடுவேன் என்று சொல்லி, என்னை தோற்கடிக்க குமாரசாமி போட்டியிட்டார். வேறு இடத்தில் அவர் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும், அங்கு செல்லவில்லை.
காங்கிரஸ் - ம.ஜ.த., கூட்டணி ஆட்சியின் போது, வெறுப்பை மறந்து அவரை முதல்வராக்கினோம். அவருக்கு நாங்கள் விஷம் வைக்கவில்லை. ஆட்சியை தக்க வைத்து கொள்ள வேண்டியது அவர்களின் பொறுப்பு தானே. அக்கட்சியை நாங்கள் அழிக்க மாட்டோம். பா.ஜ.,வே அழிக்கும்.
ஹாசனில் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ஜெயிக்க மாட்டார். ஆனால், மாண்டியாவில் புட்டராஜுக்கு ஆசை வார்த்தை காட்டி, பின் குமாரசாமியே நிற்கிறார். தொண்டர்களை ம.ஜ.த.,வும் - பா.ஜ.,வும் வளரவிடாது.
ஜவ்வரிசி, உருளை
நான், நீர்ப்பாசன துறை, பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சராக இருந்தபோது, 1,000 கோடி ரூபாய் கொள்ளை அடித்ததாக, தேவகவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
தேவகவுடா குடும்பத்துக்கு எவ்வளவு சொத்து உள்ளது என்பதை நீங்களே கணக்கிட்டு பாருங்கள். பெங்களூரை சுற்றி 1,000 ஏக்கர் சொத்து உள்ளது. ஜவ்வரிசி, உருளைகிழங்கு பயிரிட்டு, சொத்து சம்பாதிக்கலாம். ஆனால் பிறர் பணத்தை கொள்ளையடிக்க, அவர்கள் வீட்டில் கல்லெறிய கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.

