பிரஜ்வல் மொபைல் போன் ஆதாரங்கள் அழிப்பு? உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேட்டி
பிரஜ்வல் மொபைல் போன் ஆதாரங்கள் அழிப்பு? உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் பேட்டி
ADDED : ஜூன் 01, 2024 04:12 AM

பெங்களூரு : ''ஹாசன் எம்.பி., பிரஜ்வல் மொபைல் போனில் இருந்த, ஆதாரம் அழிக்கப்பட்டதா என்பது பற்றி, என்னிடம் தகவல் இல்லை,'' என, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எம்.பி., பிரஜ்வல் ரேவண்ணாவை, சிறப்பு புலனாய்வு குழு கைது செய்த பின்னர், அவர்களுடன் நான் விவாதிக்கவில்லை. அவர்கள் வேலையை சரியாக செய்வர். பிரஜ்வலை கைது செய்வதில் தாமதம் ஏற்பட்டதால், அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிக்க முன்வரவில்லை.
தற்போது அவர் கைதாகி இருப்பதால், பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக வந்து புகார் அளிக்கலாம். அந்த பெண்களுக்கு நாங்கள் பாதுகாப்பு அளிப்போம். சில பெண்கள் அளித்த வாக்குமூலத்தை, சிறப்பு புலனாய்வு குழு ரகசியமாக வைத்துள்ளது.
பிரஜ்வல் மொபைல் போனில் இருந்த, ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக சிலர் பேசுகின்றனர். அதுபற்றி என்னிடம் தகவல் இல்லை. சிறப்பு புலனாய்வு குழுவினர் தான் கூற வேண்டும்.
பிரஜ்வலை கைது செய்ய, உயர் போலீஸ் அதிகாரிகள், இன்ஸ்பெக்டர்களை அனுப்பி வைப்பது முடியாத காரியம். நமது நாடு மற்ற நாடுகளுடன் ராஜதந்திர ஒப்பந்தம் கொண்டு உள்ளது.
இத்தகைய சூழ்நிலையில் மற்ற நாடுகளின் சட்டத்தையும், நாம் மதிக்க வேண்டும். தற்கொலை செய்த வால்மீகி மேம்பாட்டு ஆணைய அதிகாரி சந்திரசேகர் குடும்பத்திற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினேன்.
வங்கியில் நடந்த பணபரிமாற்றம் குறித்து, வங்கி சார்பில் சி.பி.ஐ.,யிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இந்த வழக்கை, சி.ஐ.டி.,யிடம் ஒப்படைத்துவிட்டோம். விசாரணையும் நடக்கிறது. இதனால் சி.பி.ஐ.,யிடம் விசாரணையை ஒப்படைக்க மாட்டோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

