பயிற்சி மைய விபத்து: விசாரிக்க குழு அமைப்பு 30 நாளில் அறிக்கை அளிக்க மத்திய அரசு உத்தரவு விசாரிக்க குழு அமைத்தது மத்திய அரசு
பயிற்சி மைய விபத்து: விசாரிக்க குழு அமைப்பு 30 நாளில் அறிக்கை அளிக்க மத்திய அரசு உத்தரவு விசாரிக்க குழு அமைத்தது மத்திய அரசு
ADDED : ஜூலை 30, 2024 01:25 AM

புதுடில்லி, டில்லியில் ஐ.ஏ.எஸ்., பயிற்சி மையத்தில் வெள்ளம் புகுந்து மூன்று மாணவர்கள் பலியான விவகாரத்தில் அலட்சியமாக செயல் பட்டதாக மாநகராட்சி இன்ஜினியர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து, 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சகம் உயர்மட்ட குழுவை அமைத்துள்ளது.
டில்லியில் பழைய ராஜேந்திர நகரில் உள்ள பயிற்சி மையத்தில், மழை வெள்ளம் புகுந்ததில், மூன்று மாணவர்கள் உயிரிழந்தனர்.
மேலும் 5 பேர் கைது
இந்தச் சம்பவத்துக்கு, பயிற்சி மையத்தின் அத்துமீறிய சட்டத்துக்கு எதிரான நடவடிக்கைகள் காரணமாகக் கூறப்படுகிறது. 'பேஸ்மென்ட்' எனப்படும் கீழ் தரைத்தளத்தில் பொருட்கள் வைக்கவும், வாகனங்கள் நிறுத்தவும் அனுமதிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சட்டவிரோதமாக அங்கு நுாலகம் அமைக்கப்பட்டுள்ளது. இது போன்று, டில்லியில் உள்ள பெரும்பாலான பயிற்சி மையங்கள், விதிமீறல்களில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, மழைநீர் வடிகால்கள் சுத்தப்படுத்தப்படாதது, புதிய வடிகால்கள் முறையாக அமைக்காததும் காரணமாகக் கூறப்படுகிறது. இது, டில்லி அரசின் மெத்தனப்போக்காகக் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக ஐ.ஏ.எஸ்., பயிற்சி மைய உரிமையாளர் உட்பட இருவர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், கீழ் தரைத்தளத்தின் உரிமையாளர் உட்பட ஐந்து பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
இது குறித்து போலீசார் கூறுகையில், 'பயிற்சி மைய கட்டடத்தின் ஒவ்வொரு தளமும் வெவ்வேறு நபர்களுக்கு சொந்தமானது. இந்த வழக்கில், மேலும் ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
'இதில், கீழ் தரைத்தளத்தின் உரிமையாளரும், சொகுசு காரை ஓட்டி கட்டடத்தின் கேட்டை சேதப்படுத்திய நபரும் அடங்குவர். சொகுசு கார் பறிமுதல் செய்யப்பட்டுஉள்ளது' என்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக, ராஜேந்திர நகர் பகுதி யின் இளநிலை பொறியாளரை பணிநீக்கம் செய்த டில்லி மாநகராட்சி அப்பகுதியின் உதவி பொறியாளரையும் சஸ்பெண்ட் செய்தது.
இது குறித்து, டில்லி மாநகராட்சி அதிகாரிகளிடம் விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதைத் தொடர்ந்து, டில்லியின் பல்வேறு பகுதிகளில், வடிகால்களை தடுக்கும் ஆக்கிரமிப்புகளை, புல்டோசர் வாயிலாக மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர்.
இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக விசாரித்து, 30 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, கூடுதல் செயலர் தலைமையில் உயர்மட்ட குழுவை மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்துள்ளது.
பார்லி.,யில் எதிரொலிப்பு
பார்லிமென்டின் இரு சபைகளிலும் இந்த விவகாரம் நேற்று எதிரொலித்தது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என, பெரும்பாலான எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.
லோக்சபா பா.ஜ., - எம்.பி., பன்சூரி ஸ்வராஜ், ''மாணவர்களின் மரணத்திற்கு ஆம் ஆத்மியின் அக்கறையின்மை தான் காரணம்,'' என்றார்.
ராஜ்யசபாவில் இந்த விவகாரம் குறித்து பேசிய சபை தலைவர் ஜக்தீப் தன்கர், ''பயிற்சி மையங்கள் வணிகமயமாகி விட்டன. லாபம் ஈட்டுவதற்கான தொழிலாக இது மாறி விட்டது. வதை முகாம்களுக்கு சற்றும் சளைத்தது இல்லை, இந்த பயிற்சி முகாம்கள்,'' என்றார்.
இதற்கிடையே, உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினருக்கு, தலா 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க துணை நிலை கவர்னர் சக்சேனா உத்தரவிட்டுள்ளார்.
பயிற்சி மையத்தில் மூன்று மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமலிருக்க பொறுப்புடன் செயல்பட வேண்டும். பயிற்சி மையம் தொடர்பான வழிகாட்டுதல்களை, கடந்த ஜனவரியில் மத்திய அரசு வெளியிட்டது. இதை பின்பற்றி இருந்தால், இந்த சம்பவம் நடந்திருக்காது. பயிற்சி மையங்களின் செயல்பாடுகள், அவற்றில் உள்ள வசதிகளை மாநில அரசுகள் கண்காணிக்க வேண்டும்.
தர்மேந்திர பிரதான், மத்திய கல்வி அமைச்சர், பா.ஜ.,

