ADDED : மே 25, 2024 03:55 AM
பெங்களூரு : வாகன நெரிசல் மிகுந்த, சாளுக்யா சதுக்கம் அருகில் ரேஸ் கோர்ஸ் சாலையில் கட்டப்படும் நடைமேம்பாலப் பணிகள், முடிவதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
பெங்களூரு மாநகராட்சி, நகரில் மிக அதிகமான வாகன நெரிசல் மிகுந்த, 15 இடங்களை அடையாளம் கண்டது. இங்கெல்லாம் பாதசாரிகளின் வசதிக்காக, நடை மேம்பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இவற்றில் சாளுக்யா சதுக்கம் நடை மேம்பாலமும் ஒன்றாகும். இந்த பகுதியில் கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் பயத்துடன் சாலையை கடக்கின்றனர்.
சாளுக்யா சதுக்கம் அருகில், ரேஸ்கோர்ஸ் சாலையின், இந்திய வித்யாபவன் எதிரில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, நடை மேம்பாலம் கட்டும் பணிகள் துவக்கப்பட்டன.
தனியார் நிறுவனத்திடம் கட்டுமான பணிகள் ஒப்படைக்கப்பட்டன. நடைமேம்பாலம் கட்டுவதற்கான செலவை, இந்த நிறுவனம் ஏற்றுள்ளது. இந்திய வித்யா பவன் அருகில் இடப்பிரச்னை ஏற்பட்டுள்ளது.
திட்டம் வகுத்தபோது, இடத்தை அதிகாரிகள் சரியாக ஆய்வு செய்து, அளவிடவில்லை.
இதனால் வித்யாபவன் வளாகத்துக்குள், நடைமேம்பால படிகள் கட்ட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கு வித்யாபவன் நிர்வாகம் ஆட்சேபம் தெரிவித்துள்ளது. இதன் விளைவாக பணிகள் நின்றுள்ளன.
இடத்தை விட்டுத்தரும்படி மாநகராட்சி மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது. கல்வி நிறுவனம் இன்னும் பதில் அளிக்கவில்லை.
பணிகள் பாதியில் நின்றதால், மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சாலையில் இடைவிடாமல், வேகமாக செல்லும் வாகனங்களுக்கு இடையே, உயிரை கையில் பிடித்தபடி, சாலையை கடக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பணிகளை விரைந்து முடிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.

