ADDED : ஏப் 15, 2024 03:48 AM
பெங்களூரு : வரலாற்று பிரசித்தி பெற்ற, பெங்களூரு கரக உற்சவம் இன்று துவங்குகிறது. தர்மராயசுவாமி கோவில், கரகம் செல்லும் சாலைகளில் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
தர்மராயசுவாமி கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் சதீஷ் கூறியதாவது:
பெங்களூரு கரக உற்சவம், இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இம்முறையும் அர்ச்சகர் ஞானேந்திரா கரகம் சுமப்பார். கரகம் ஏற்கனவே தர்மராயசுவாமி கோவிலுக்கு வந்துள்ளது. அர்ச்சகர் ஞானேந்திரா, யோகா உட்பட பல்வேறு கைங்கர்யங்களில் ஈடுபட்டுள்ளார்.
திரவுபதியுடன் கூடிய, தர்மராயசுவாமி பரிவாரத்தை சுமந்து செல்லும் மரத்தினால் ஆன ரதம், புதுப்பிக்கப்பட்டு ரத உற்சவத்துக்கு தயார் நிலையில் நிற்கிறது. உற்சவத்தை வெற்றிகரமாக நடத்த ஏற்பாடுகள் செய்கின்றனர்.
கரகத்துக்கு சேலம் மல்லிகை மொட்டுகள், பெங்களூருக்கு வரும். இம்முறை உற்சவத்தில் 3,000க்கும் மேற்பட்ட வீரகுமாரர்கள் பங்கேற்பர். அனைவருக்கும் தர்மராயசுவாமி கோவில் சார்பில், இலவச சிவப்பு உடை, தலைப்பாகை வழங்கப்படும்.
தர்மராயசுவாமி கோவில், கரகம் செல்லும் சாலைகளில் மின் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. வரும் 23ம் தேதி கரக ஊர்வலம் நடக்கிறது.
இவ்வாறு அவர்கூறினார்.

