ஆம் ஆத்மி எம்.பி., ஸ்வாதி மாலிவால் மீது... தாக்குதல்? கெஜ்ரிவால், அவரது உதவியாளர் மீது புகார்
ஆம் ஆத்மி எம்.பி., ஸ்வாதி மாலிவால் மீது... தாக்குதல்? கெஜ்ரிவால், அவரது உதவியாளர் மீது புகார்
ADDED : மே 14, 2024 01:35 AM

டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளரால், ராஜ்யசபா ஆம் ஆத்மி பெண் எம்.பி., தாக்கப்பட்டதாகவும், கெஜ்ரிவாலின் அறிவுறுத்தலின்படி இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் எழுந்துள்ள குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ., சமூக ஊடகப் பிரிவு தலைவர் அமித் மால்வியா, சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட செய்தியால் டில்லி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டது.
அதில், 'ஆம் ஆத்மி ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால், டில்லி முதல்வரின் உதவியாளரால் தாக்கப்பட்டுள்ளார். அரவிந்த் கெஜ்ரிவால் கைதானதிலிருந்து ஸ்வாதி மாலிவால் பெரும் அமைதி காத்து வந்தார். அந்த நேரத்தில் இவர் டில்லியில் கூட இல்லை' என, தெரிவிக்கப் பட்டிருந்தது.
கைகலப்பு
இதுகுறித்து டில்லி போலீஸ் அதிகாரி மனோஜ் மீனா கூறுகையில், ''முதல்வரின் இல்லம் அருகே உள்ள சிவில் லேன் போலீசுக்கு, காலை 9:00 மணிக்கு ஒரு அழைப்பு வந்தது. ஒரு பெண், அதில் பேசியுள்ளார்.
''அப்போது, டில்லி முதல்வரின் இல்லத்தில் வைத்து, முதல்வரின் உதவியாளரால், தான் தாக்கப்படுவதாக அந்த பெண் தெரிவித்துள்ளார்.
''சிறிதுநேரம் கழித்து, சிவில் லேன் போலீஸ் ஸ்டேஷனுக்கு, ராஜ்யசபா எம்.பி., ஸ்வாதி மாலிவால் வந்தார். இருப்பினும், பிறகு வந்து புகார் அளிக்கிறேன் என்று கூறி சென்றுவிட்டார்,'' என்றார்.
இது குறித்து அரசியல் வட்டாரங்கள் கூறியதாவது:
காலை 9:00 மணிக்கு, முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்திற்கு ஸ்வாதி மாலிவால் வந்தார். முதல்வரை சந்திக்க வேண்டுமென்று கேட்டதும், முதல்வரின் உதவியாளர் பிபவ் குமார், அவருக்கு அனுமதி மறுத்துள்ளார்.
அப்போதே, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு நடந்தது. இதையடுத்து, உடனடியாக போலீசிடம் ஸ்வாதி மாலிவால் பேசியுள்ளார்.
இரண்டு முறை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, அவரிடமிருந்து போன் வந்தது.
முதல்முறை பேசும்போது, முதல்வரின் உதவியாளர் தாக்குவதாக குறிப்பிட்ட ஸ்வாதி மாலிவால், இரண்டாவது முறை பேசும்போது, தன் உதவியாளரை வைத்து, முதல்வர் அடிப்பதாக கூறியுள்ளார்.
போலீஸ் தரப்பில் இது குறித்து புகார் பதியப்பட்டவுடன், உடனடியாக போலீஸ் டீம் விரைந்தது. அங்கிருந்த ஸ்வாதி மாலிவாலிடம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்து புகார் தெரிவிக்கும்படி இன்ஸ்பெக்டர் கூறினார்.
அவரும், போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துள்ளார். இதற்குள், விவகாரம் பெரிய அளவில் பரவியது. என்ன நினைத்தாரோ தெரியவில்லை.
புகார் எதுவும் தராமல் ஸ்டேஷனிலிருந்து ஸ்வாதி மாலிவால் கிளம்பிவிட்டார்.
எதிர்ப்பு
ஆம் ஆத்மி கட்சியின் மூத்த உறுப்பினர் என்பதுடன், டில்லி மகளிர் ஆணையத்தில் கடந்த எட்டு ஆண்டுகள் தலைவராகவும் பணியாற்றியவர் ஸ்வாதி மாலிவால். கடந்த ஜனவரியில் தான் ராஜ்யசபா எம்.பி.,யானார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைதானதும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க் கள் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால், ஸ்வாதி மாலிவாலும், இன்னொரு ராஜ்யசபா எம்.பி.,யான ராகவ் சத்தாவும், மிகுந்த அமைதியாகவே இருந்து வருகின்றனர். இவர்களின் மவுனத்தை, கட்சிக்குள் இருக்கும் பலரும் கவனித்தபடி இருந்தனர்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ராகவ் சத்தாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், அவர் வெளிநாட்டிலிருந்து இன்னும் நாடு திரும்வில்லை. முதல்வரின் கைது நடவடிக்கைக்கு இதுவரையில் எந்த எதிர்ப்பையும் பதிவு செய்யவில்லை.
ஸ்வாதி மாலிவாலும் எதிர்ப்பை பதிவு செய்யவில்லை. இது, கட்சிக்குள் பலத்த சந்கேத்தை கிளப்பியுள்ளது.
பா.ஜ.,வின் வளையத்திற்குள் இந்த இரு எம்.பி.,க்களும் எப்போதோ வந்துவிட்டனர் என்ற பேச்சும், ஆம் ஆத்மி கட்சிக்குள் இருந்து வந்தது. இருவரும் சேர்ந்து கட்சியை உடைக்கலாம் என்றும் பேச்சு இருக்கிறது.
இந்நிலையில் தான், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திஹார் சிறையிலிருந்து ஜாமினில் வெளிவந்து இரண்டு நாட்கள் ஆகியும் அவரை சந்திக்க, ஸ்வாதி மாலிவால் வராமல் இருந்து உள்ளார்.
நேற்று அவர், இல்லத்திற்குள் வந்ததுமே அங்கிருந்த கட்சியினர் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதன் பிறகுதான் இல்லத்திற்குள் நுழைந்ததும் இந்த சம்பவம் நடந்தது.
இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையே, ஸ்வாதி மாலிவால் மீதான தாக்குதல் குறித்து விசாரிக்க, ஒரு குழுவை அமைக்கவுள்ளதாக அறிவித்துள்ள தேசிய பெண்கள் ஆணையம், டில்லி போலீசாரிடமும் இது குறித்து அறிக்கை கேட்டு உள்ளது.
- நமது டில்லி நிருபர் -

