ADDED : ஏப் 14, 2024 07:03 AM

பீதர்: தனக்கு சிறு வயது, அரசியல் அனுபவம் இல்லை என, விமர்சிக்கும் எதிர்க்கட்சியினருக்கு, பீதர் காங்கிரஸ் வேட்பாளர் சாகர் கண்ட்ரே சவால் விடுத்துள்ளார்.
பீதர் லோக்சபா தொகுதியில், வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கண்ட்ரே மகன் சாகர், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுகிறார். இவருக்கு 26 வயது தான்; அரசியல் அனுபவம் இல்லை என, எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர்.
இதுகுறித்து, பீதரில் நேற்று அவர் கூறியதாவது:
வயதில் சிறியவன், அனுபவம் இல்லை என, எதிர்க்கட்சியினர் கூறுகின்றனர். ஆனால் நான் பி.பி.ஏ., -- எல்.எல்.பி., ஐந்தாண்டு படிப்பு முடித்துள்ளேன். வக்கீல், நீதிபதிகளிடம் பணியாற்றிய அனுபவம் உள்ளது. எனக்கு சட்ட அறிவு உள்ளது. வேண்டுமானால் என்னை விமர்சிப்போர், என்னுடன் விவாதிக்க வாருங்கள். யாருக்கு அறிவு உள்ளது என, தெரியும். இது என் சவால்.
மாநில, தேசிய, சர்வதேச சம்பந்தப்பட்ட எந்த விஷயமாக இருந்தாலும், விவாதிக்க தயாராக இருக்கிறேன். யாருக்கு எவ்வளவு அறிவு, பணியாற்றும் திறன் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
பகவந்த்கூபா 10 ஆண்டுகள், பீதரில் எம்.பி.,யாக உள்ளார். நாங்கள் எந்த பஞ்சாயத்துகளுக்கு சென்றாலும், பகவந்த்கூபா எங்கள் பஞ்சாயத்துக்கு வரவில்லை; நிதியுதவியும் பெற்று வரவில்லை என்கின்றனர்.
என்னை தேர்வு செய்து டில்லிக்கு அனுப்பினால், தினமும் 24 மணி நேரம் மக்களுக்காக பணியாற்றுவேன். அவர்களின் கஷ்டங்களை தீர்ப்பேன். பகவந்த்கூபா போன்று நடந்து கொள்ள மாட்டேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

