ADDED : ஏப் 25, 2024 02:14 AM
புதுடில்லி:திஹார் சிறையில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை தவறாக நடத்துவதாக குற்றம் சாட்டி, ஆம் ஆத்மி கட்சியினர் நேற்று, ஐ.டி.ஓ., சவுக்கில் போராட்டம் நடத்தினர். போலீசார் அவர்களை கைது செய்து விடுவித்தனர்.
டில்லி அரசின் மதுபானக் கொள்கை முறைகேடு நடந்ததாகவும், அதில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் நடந்ததாகவும் வழக்குப் பதிவு செய்த அமலாக்கத் துறை, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை கைது செய்தது.
திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், தவறாக நடத்தப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சிறையில் அவருக்கு தேவையான மருந்துகளை வழங்காமலும், குடும்பத்தினரை சந்திக்க அனுமதி மறுப்பதாகவும் ஆம் ஆத்மி தலைவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,வும், கிழக்கு டில்லி லோக்சபா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளருமான குல்தீப் குமார் தலைமையில் நேற்று காலை 9:00 மணிக்கு, அக்கட்சியினர் ஐ.டி.ஓ., சவுக்கில் திரண்டனர். சிறையில் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். அவர்கள் தீன் தயாள் சாலையை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி 3 பேரை மட்டும் கைது செய்தனர்.
குல்தீப் குமார் உட்பட மற்றவர்கள் கலைந்து சென்றனர். கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் டாக்டர்கள். மூவரும் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, சற்று நேரத்தி விடுவிக்கப்பட்டனர்.
கிழக்கு டில்லி லோக்சபா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளரான குல்தீப் குமார், “ நாங்கள் பிளக்ஸ் பேனர்களுடன் நின்றதால், அதற்கு போலீஸ் அனுமதி பெறத் தேவையில்லை. திஹார் சிறையில் கெஜ்ரிவால் உயிருடன் மத்திய அரசு விளையாடுகிறது. எந்த ஆதாரமும் இல்லாமல் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு டில்லி மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பர்,”என்றார்.

