ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிந்து வந்து காங்கிரசில் இணைந்த பா.ஜ., பிரமுகர்
ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிந்து வந்து காங்கிரசில் இணைந்த பா.ஜ., பிரமுகர்
ADDED : ஏப் 11, 2024 05:15 AM

கதக்: ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிந்து வந்து, பா.ஜ., பிரமுகர், காங்கிரசில் இணைந்தார்.
கதக் ரோன் மெனசகி கிராமத்தின் நிங்கபசப்பா பனாட். ரோன் தாலுகா பா.ஜ., பிரமுகர். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் 30 ஆண்டுகளாக உள்ளார். கதக்கின் நரகுந்தில் நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் மாநாடு நடந்தது. அமைச்சர் சிவானந்தா பாட்டீல், முன்னாள் அமைச்சர் பி.ஆர்.யாகல், முன்னாள் எம்.எல்.ஏ., நஞ்சமாதய்யா கலந்து கொண்டனர்.
அப்போது அங்கு வந்த நிங்க பசப்பா பனாட், அமைச்சர் சிவானந்தா பாட்டீல் முன்னிலையில், காங்கிரசில் இணைந்தார். அப்போது அவர் ஆர்.எஸ்.எஸ்., சீருடை அணிந்து இருந்தார்.
காங்கிரசில் இணைந்த பின்பு நிங்கபசப்பா பனாட் கூறுகையில், ''கடந்த 30 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் உள்ளேன். பா.ஜ.,விலும் சில ஆண்டுகள் இருந்து உள்ளேன். பா.ஜ.,வில் எதுவும் சரி இல்லை. பணம் இருப்பவர்களுக்கு தான் பதவி கொடுக்கின்றனர். இதனால் காங்கிரசில் இணைந்து உள்ளேன். நான் நேசிக்கும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சீருடை அணிந்து வந்து, காங்கிரசில் சேர்ந்தது மகிழ்ச்சி அளிக்கிறது,'' என்றார்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அமைச்சர் சிவானந்தா பாட்டீலின் தம்பி மகன், ஹர்ஷ் கவுடா பாட்டீல் பா.ஜ.,வில் இணைந்தார். அவர் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில், பல ஆண்டுகள் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

