ADDED : ஏப் 01, 2024 11:34 PM
குவஹாத்தி: வடகிழக்கு மாநிலமான அசாமின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. அத்துடன் பலத்த காற்றும் வீசியது. இதில், சாலையோர மரங்கள் வேரோடு சாய்ந்ததுடன், மின் கம்பங்களும் சேதமடைந்தன; ஏராளமான வீடுகளும் இடிந்து தரைமட்டமாகின.
தொடர் கனமழையால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பின; இதன் காரணமாக பிரம்மபுத்திரா ஆற்றில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதை அறியாமல், அசாமின் சிசுமாரா காட் பகுதியில் இருந்து நெபுரேர் ஆல்கா காட் நோக்கி படகில், 15 பேர் சென்றனர்.
அப்போது, ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த பெரும்பாலானோர் நீந்திச் சென்று உயிர் தப்பினர்.
எனினும், 4 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதேபோல் அப்பகுதியைச் சேர்ந்த இருவர் மாயமாகி உள்ளனர். அவர்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், அடுத்த ஐந்து நாட்களுக்கு அசாம் உட்பட வடகிழக்கு மாநிலங்களில் கனமழை அல்லது மிக கனமழை பெய்யும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

