ADDED : ஏப் 29, 2024 04:45 AM
பெங்களூரு. : பெங்களூரு வரலாற்றில் 28 ஆண்டுகளுக்கு பின், நேற்று 38.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
பெங்களூரு உட்பட கர்நாடகாவில் நடப்பாண்டு வெப்பம் வாட்டி வதைக்கிறது. இதனால் பொது மக்கள் மதியம் 12:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை வெளியே வர வேண்டாம் என மருத்துவர்கள் அறிவுரை கூறியுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
எல் நினோ மற்றும் புவி வெப்பமடைதலால் பெங்களூரில் அதிக வெப்பம் பதிவாகி உள்ளது. அத்துடன் மழையும் பெய்யாததால், நகரில் அனல் காற்று வீசி வருகிறது.
பெங்களூரில் கடந்த 1996 மார்ச் 27 ம் தேதி 37.3 டிகிரி செல்ஷியஸ் தான் அதிகமாக கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால் 28 ஆண்டுகளுக்கு பின், நேற்று 38.5 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவாகி உள்ளது.
நாளை (ஏப்., 30) முதல் மே 3ம் தேதி வரை பெங்களூரு, விஜயபுரா, ஹாசன் உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பாகல்கோட், பீதர், கதக் உட்பட பல மாவட்டங்களுக்கு மஞ்சள் 'அலெர்ட்' விடுக்கப்பட்டு உள்ளது. அதேவேளையில், பெங்களூரு உட்பட சில மாவட்டங்களின் சில பகுதிகளில் அனல் காற்று தொடரும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.

