ADDED : ஏப் 02, 2024 10:30 PM
ஹாவேரி : லாரி மீது மோதி சரக்கு வேன் கவிழ்ந்ததில், மூன்று பேர் உயிரிழந்தனர். இருபது ஆடுகள் இறந்தன.
ஹாவேரியின் ராணிபென்னுார் ககோலா கிராமத்தின் குட்டப்பா, 40, மைலாரப்பா, 41, சிவராஜ், 22 ஆகிய மூன்று பேரும் ஊர், ஊராக சென்று 'பட்டி' அமைத்து, ஆடு மேய்த்து வந்தனர். நேற்று மதியம் சரக்கு வேனில் 20 ஆடுகளை ஏற்றிக் கொண்டு, ஷிகாவிக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றனர்.
ஷிகாவி அருகே பங்காபுரா சோதனைச் சாவடியில், சரக்கு வேன் சென்ற போது, சாலையோரம் நின்ற லாரி மீது, மோதி கவிழ்ந்தது.
அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று, சரக்கு வேனில் இருந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். டிரைவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார். ஆனால் இடிபாடுகளில் சிக்கி குட்டப்பா, மைலாரப்பா, சிவராஜ் உயிரிழந்தனர். 20 ஆடுகளும் உடல் நசுங்கி செத்தன. சரக்கு வேனை டிரைவர் வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியது, விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

