ரேணுகாசாமி வழக்கு தர்ஷன் உட்பட 17 பேரின் காவல் நீட்டிப்பு தாக்கியதை நடிகர் ஒப்புக்கொண்டதாக தகவல்
ரேணுகாசாமி வழக்கு தர்ஷன் உட்பட 17 பேரின் காவல் நீட்டிப்பு தாக்கியதை நடிகர் ஒப்புக்கொண்டதாக தகவல்
ADDED : செப் 10, 2024 06:59 AM

பெங்களூரு: ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன் உட்பட 17 பேரின் நீதிமன்றக் காவல், வரும் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ரேணுகாசாமியை தாக்கியதை, தர்ஷன் ஒப்புக்கொண்டதாக குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
3,991 பக்கங்கள்
சித்ரதுர்காவின் ரேணுகாசாமி, 33, என்பவரை கொலை செய்த வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி பவித்ரா உட்பட 17 பேர் கைது செய்யப்பட்டு, பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை தொடர்பாக, 3,991 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை, கடந்த வாரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், இவர்களின் நீதிமன்றக் காவல் நேற்றுடன் நிறைவு பெற்றது. இதனால், பெங்களூரு 24வது ஏ.சி.எம்.எம்., நீதிமன்றத்தில், அரசு தரப்பு வக்கீல் பிரசன்ன குமார், நேற்று ஆஜராகி வாதாடினார்.
சிறையில் இருப்பவர்கள், கொலை செய்ததற்கான ஆதாரம் இருப்பதாக, 'பென்டிரைவ், ஹார்ட் டிஸ்க்' உட்பட டிஜிட்டல் சாட்சியங்கள், அரசு தரப்பில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.
'வீடியோ கான்பரன்ஸ்'
அப்போது, பல்லாரி சிறையில் இருந்து தர்ஷன்; பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து, பவித்ரா உட்பட வெவ்வேறு சிறையில் இருக்கும், 17 பேரும் 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
அனைவரது நீதிமன்றக் காவலையும், வரும் 12ம் தேதி வரை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார். அன்றைய தினம், அனைவரும் நீதிமன்றத்தில் மீண்டும் ஆஜராக வேண்டும்.
இதற்கிடையில், நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில் இடம்பெற்ற தகவல்கள் குறித்து நேற்றும் சமூக ஊடகங்களில் வெளியானது.
இதன்படி, ரேணுகாசாமியை தாக்கியது உண்மை என, தர்ஷன் ஒப்புக்கொண்டதாக குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கொலை எப்படி?
குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ள தகவல்கள்:
ரேணுகாசாமியை நான் கையால் ஓங்கி அடித்தேன். காலால், தலையில் மிதித்தேன். பவித்ராவை அழைத்து, செருப்பால் அடிக்கும்படி கூறினேன். அதன்பின், பவித்ராவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கும்படி, அவனிடம் கூறினேன். அதன்படி, அவனும் பவித்ராவின் காலில் விழுந்தான்.
பின், பவித்ராவை, காருக்கு அழைத்துச் செல்லும்படி பிரதோஷிடம் கூறினேன். அவரை வீட்டில் கொண்டு விடும்படி, வினயிடம் கூறினேன். அதற்குள், என் கார் ஓட்டுனர் லட்சுமண் வந்தான். அவனும், ரேணுகாசாமியின் கழுத்தை கைகளால் நெரித்தும், முதுகிலும் தாக்கினார்.
அங்கேயே இருந்த நந்தீஷ், ரேணுகாசாமியை துாக்கி, எனக்கு முன்னால் தரையில் போட்டார்.
'யாருக்கு தவறான மெசேஜ் அனுப்புகிறாய்?' என்று பவன் கேட்டார்.
மொபைல் போனை எடுத்து, சிலருக்கு அனுப்பிய மெசேஜ் குறித்து படித்தார். பல நடிகையருக்கும் ரேணுகாசாமி மெசேஜ் அனுப்பியதை படித்து காண்பித்தார்.
ரூ.30 லட்சம்
அப்போது, நான் ரேணுகாசாமியை திட்டி, கால்களால் ஒன்றிரண்டு முறை உதைத்தேன். அதன் பின், வினயுடன், நான் புறப்பட்டேன். வழியில் ஜெயண்ணா கிடைத்தார். அவரிடம் பேசிவிட்டு, ஐடியல் ஹோம்ஸ் வீட்டுக்கு சென்றோம். இரவு 7:30 மணியளவில், என் வீட்டுக்கு பிரதோஷ் வந்து, ரேணுகாசாமி இறந்த தகவலை தெரிவித்தார்.
அதன்பின், நானே நேரில் சென்றேன். அவன் இறப்பு குறித்து, நாகராஜ், லட்சுமண் ஆகியோர் என்னிடம் கூறினர்.
'இந்த விஷயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன், 30 லட்சம் ரூபாய் கொடுங்கள்' என பிரதோஷ் கேட்டார்.
'என் வீட்டில் இருந்த 30 லட்சம் ரூபாயை அவரிடம் கொடுத்தேன். அப்போது, வினய் கேட்ட 10 லட்சம் ரூபாயும் கொடுத்தேன்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், தர்ஷனுக்கு ஜாமின் மனு தாக்கல் செய்ய, அவரது தரப்பு வக்கீல்கள் தயாராகி வருகின்றனர்.

