sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்

/

ஆயிரம் சந்தேகங்கள்: தகவல்களில் மாற்றம் இல்லை என்றாலும் 'கே.ஒய்.சி., அப்டேட்' அவசியமா?

/

ஆயிரம் சந்தேகங்கள்: தகவல்களில் மாற்றம் இல்லை என்றாலும் 'கே.ஒய்.சி., அப்டேட்' அவசியமா?

ஆயிரம் சந்தேகங்கள்: தகவல்களில் மாற்றம் இல்லை என்றாலும் 'கே.ஒய்.சி., அப்டேட்' அவசியமா?

ஆயிரம் சந்தேகங்கள்: தகவல்களில் மாற்றம் இல்லை என்றாலும் 'கே.ஒய்.சி., அப்டேட்' அவசியமா?


ADDED : ஆக 12, 2024 03:56 AM

Google News

ADDED : ஆக 12, 2024 03:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான் ஒரு வங்கியின் கிளையில் நீண்ட காலமாக கணக்கு வைத்து உள்ளேன். என் வாடிக்கையாளர்கள் மேற்படி கணக்கிற்கு பணம் அனுப்பி வருகின்றனர். தற்போது அதே வங்கியின் வேறு ஒரு கிளைக்கு கணக்கை மாற்ற விரும்புகிறேன். எனவே ஐ.எப்.எஸ்.சி., குறியீடு மாறுகிறது. இதனால், என் கணக்கிற்கு வரும் வரவுகள் பாதிக்கப்படுமா? ஐ.எப்.எஸ்.சி., மாற்றம் குறித்து, அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் தெரியப்படுத்த வேண்டுமா?


ஆர். நாகராஜன், கோவை.

ஆமாம். தெரிவித்து தான் ஆகவேண்டும். ஒரே வங்கியில், ஒரு கிளையில் இருந்து இன்னொரு கிளைக்கு மாறும்போது, முன்னால் இருக்கும் நான்கு எழுத்துகள் அப்படியே இருக்கும். ஆனால், அந்த வங்கி கிளையை குறிப்பிடும் பிரத்யேக எண் மாறியிருக்கும். அதனால், புது எண்ணைக் கொடுத்தால் தான், அந்தக் குறிப்பிட்ட கிளைக்கு பணம் வந்து சேரும்.

ஆனால், தற்சமயம் பல தனியார் வங்கிகளில், 'கோர் பேங்கிங்' என்ற வசதி உள்ளது. ஒவ்வொரு வாடிக்கையாளர் எண்ணுமே தனித்துவமானது என்பதால், அது எந்தக் கிளையில் இருந்தாலும், பணத்தைப் பெறமுடியும்.

உங்கள் சேமிப்புக் கணக்குக்கு அந்தப் பணம் வந்துவிடும். இந்த வசதி உங்கள் வங்கியில் இருக்கிறதா என்று பாருங்கள். இல்லையெனில், புதிய ஐ.எப்.எஸ்.சி., எண்ணை வாடிக்கையாளருக்குத் தெரியப்படுத்துங்கள்.

பொதுத்துறை வங்கி ஒன்றில் மியூச்சுவல் பண்டில் எஸ்.ஐ.பி., வாயிலாக மாதந்தோறும் ஒரு தொகை செலுத்துகிறேன். அதில் வேறு நேரடி, மறைமுக கட்டணங்கள் எதுவும் பிடிப்பதில்லை. ஆனால், அதே வங்கியின் என்.பி.எஸ். திட்டத்தில் நேரடி, மறைமுக சேவைக் கட்டணங்கள் தனித்தனியாக பிடித்தம் செய்யப்படுகின்றன. அதுமட்டுமின்றி, வங்கிக்கு நேரடியாக சென்றாலும், போன் செயலி வாயிலாக மட்டுமே பணம் கட்டச் சொல்கின்றனர். என்ன செய்வது?


சந்திரா, ராஜபாளையம்.

என்.பி.எஸ். திட்டத்தில் நீங்கள் தெரிவிக்கும் கட்டணங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை மறைமுக கட்டணங்கள் அல்ல. என்.பி.எஸ்., திட்டத்தில் சேரும்போதே, இத்தகைய கட்டணங்கள் வசூலிக்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கும்.

இப்போது வங்கியில் போய், நேரடியாக பணம் கட்டுவதை, பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விரும்புவதில்லை. வங்கிகளும் ஊக்கப்படுவத்துவதில்லை. எல்லாமே செயலி தான். இதனால், வாடிக்கையாளரை கையாள்வதற்கான செலவு வங்கிகளுக்கு கணிசமாக குறைகிறது.

வங்கியில் நேரடியாக வந்து தான் பணம் கட்டுவேன் என்று வற்புறுத்திப் பாருங்கள். அவர்கள் ஏற்றுக்கொள்வர். நான் அறிந்தவரை, நேரடியாக சேவை வழங்க மாட்டோம் என்று, இந்தியாவில் எந்த வங்கியும் இதுவரை வெளிப்படையாக அறிக்கவில்லை.

வங்கி, மியூச்சுவல் பண்டு, டீமேட் கணக்கு என எல்லாவற்றிலும், குறிப்பிட்ட இடைவெளியில் கே.ஒய்.சி., அப்டேட் பண்ண சொல்கின்றனர். ஏற்கனவே கொடுத்த தகவலில் எந்த மாற்றம் இல்லையென்றாலும், தகவல்களை அப்டேட் செய்ய வேண்டுமா? எதற்காக இப்படி கேட்கின்றனர்?


வி. பாலாஜி, திருச்சி.

நீங்கள் சொல்வது போல், ஒவ்வொருவரும் தனித்தனியே கே.ஒய்.சி., விபரங்களைக் கேட்கின்றனர் என்பது ஒரு பிரச்னை தான். பல்வேறு காலகட்டங்களில் திரட்டப்பட்ட தகவல்கள் முழுமையானதாக இல்லை. இவையெல்லாம் பல மட்டங்களில், பல பிரச்னைகளை ஏற்படுத்துகின்றன.

சமீபத்தில் ஒரு பிரச்னை குறித்து கேள்விப்பட்டேன். வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்ட பின்னர், குறிப்பிட்ட இரண்டு வங்கிகளின் வாடிக்கையாளர்கள் விபரங்கள் சேகரிக்கப்பட்டு சேர்க்கப்பட்டுள்ளன.

இதில் ஒரு வாடிக்கையாளரை, அவருக்கு சம்பந்தமே இல்லாத யாரோ ஒருவர் வாங்கிய கடனுக்கான 'கேரண்டராக' போட்டுள்ளனர். இதனால் அந்த வாடிக்கையாளரின் 'சிபில் ஸ்கோர்' அடிவாங்குகிறது. இந்த விபரங்களை சீர்செய்வதற்குள் அவர் செத்து சுண்ணாம்பு ஆகிவிட்டார்.

இதுபோன்ற பிரச்னைகள் எழக்கூடாது என்ற கருத்தில் தான் கே.ஒய்.சி., அப்டேட் செய்யச் சொல்கின்றனர். மேலும் ஒருமித்த கே.ஒய்.சி. எனப்படும் நடைமுறையும் அமலாகி வருகிறது. மீண்டும், மீண்டும் செய்ய வேண்டியிருக்கிறதே என்று எரிச்சல் படாதீர்கள். ஒருவகையில், இது நல்லது என்றே சொல்வேன்.

என் கிரெடிட் கார்டில் ஏற்பட்ட தவறை சுட்டிக்கட்டி, வங்கியில் திருத்தம் பெற்றுவிட்டேன். ஆனால், சிபில் ஸ்கோரில் மாற்றம் வரமாட்டேன் என்கிறதே? என்ன செய்ய?


சி.ஆர். ராமமூர்த்தி, சென்னை.

ஒன்றும் செய்யமுடியாது. சிபில் ஸ்கோர் என்பது செத்த பிணம் மாதிரி அசைவற்று கிடக்கிறது. உங்களைப் போல் எண்ணற்றோர் வங்கித் துறை குறைதீர்வாணையர் வரை போய் புகார் கொடுத்தும் பார்த்துவிட்டனர். கிரெடிட் பீரோக்கள் அவ்வளவு சீக்கிரத்தில் மசியமாட்டேன் என்கின்றன.

முதலில் உங்களுக்கு திருத்தம் கொடுத்த வங்கியே, அந்த விபரத்தை கிரெடிட் பீரோக்களுக்கு அனுப்பிவைக்க மாதக் கடைசி வரை நேரம் எடுத்துக்கொள்ளும். அதன் பின், சிபிலில் அந்த நபருடைய ஸ்கோர் மாற 30 நாட்கள் ஆகும். அதாவது குறைந்தபட்சம் 60 நாட்களுக்கு முன்னர், கிரெடிட் ஸ்கோர் மாறவே மாறாது.

இத்தகைய அநியாயம், ஆர்.பி.ஐ., கவர்னர் சக்திகாந்த தாஸ் காதுகளுக்கு எட்டியிருக்கிறது போலிருக்கிறது. ஜனவரி 1, 2025 முதல், 15 நாட்களுக்கு ஒருமுறை கிரெடிட் ஸ்கோரை அப்டேட் செய்யவேண்டும் என்று உத்தர விட்டிருக்கிறார். இன்றைக்கு வங்கித் துறையில் எல்லா தரவுகளுமே, டிஜிட்டலைஸ் செய்யப்பட்டுவிட்டன. ஒவ்வொரு நாளுமே கிரெடிட் ஸ்கோர் அப்டேட் செய்யப்படலாம். ஆனால், அதெல்லாம் நடைபெற இன்னும் மாமாங்கம் ஆகும் போலிருக்கிறது.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்

pattamvenkatesh@gmail.com ph:98410 53881






      Dinamalar
      Follow us