sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்

/

 ஆயிரம் சந்தேகங்கள் : ஒற்றை தங்க வளையலை அடகு வைக்க முடியாதா?

/

 ஆயிரம் சந்தேகங்கள் : ஒற்றை தங்க வளையலை அடகு வைக்க முடியாதா?

 ஆயிரம் சந்தேகங்கள் : ஒற்றை தங்க வளையலை அடகு வைக்க முடியாதா?

 ஆயிரம் சந்தேகங்கள் : ஒற்றை தங்க வளையலை அடகு வைக்க முடியாதா?


UPDATED : மார் 16, 2026 01:56 AM

ADDED : மார் 16, 2026 01:54 AM

Google News

UPDATED : மார் 16, 2026 01:56 AM ADDED : மார் 16, 2026 01:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

என்னிடம் 'ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், ரிலையன்ஸ் பவர்' ஆகிய பங்குகள் உள்ளன. ஆனால், இதற்கான சான்றிதழ்கள் என்னிடம் இல்லை. இவற்றை விற்று பணமாக்க வேண்டும். தங்கள் ஆலோசனை தேவை.

எஸ்.கோபு, கோவை. பங்குகளை வாங்கினால் போதாது, அந்த நிறுவனம் செயல்பாட்டில் இருக்கிறதா? பங்குச் சந்தையில் அதன் விலை உயர்ந்திருக்கிறதா, சரிந்திருக்கிறதா என்பதையெல்லாம் தொடர்ச்சியாக கண்காணித்து, அதற்கு ஏற்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இப்போது பாருங்கள், உங்களிடம் இருக்கும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் ஏற்கனவே திவாலாகி, பங்குச்சந்தையில் இருந்தே காணாமல் போய்விட்டது. அதன் மதிப்பு பூஜ்ஜியம். ரிலையன்ஸ் பவர் மட்டும் இன்னும் வர்த்தகமாகி வருகிறது. ஆனால், அதன் விலை மிகவும் குறைவாகவே உள்ளது.

பங்குகளை மீட்க நீங்கள் குறைந்தது சில ஆயிரங்களையாவது செலவு செய்ய வேண்டும். அப்படியெல்லாம் செய்தாலும், நீங்கள் முதலீடு செய்த அசல் தொகை கூட தேறாது. ஏதோ தர்ம காரியத்துக்கு செலவிட்டதாக கருதி, மறந்து விடுங்கள்.

எனது அவசர தேவைக்காக, தனியார் வங்கி கிளையில் ஒரு தங்க வளையலை கொடுத்து நகைக்கடன் கேட்டதற்கு, 'ஒரு வளையலுக்கு கடன் தரமுடியாது; ஜோடியாக அதாவது இரண்டு வளையலாக கொண்டுவந்தால்தான் கடன் வழங்க இயலும் என்றும் கூறி திருப்பி அனுப்பி விட்டனர். தங்க நகை கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கி இதுபோன்ற கட்டுப்பாடுகள் ஏதும் விதித்துள்ளதா என்று கேட்டதற்கு, மதிப்பீட்டாளர் எந்த ஒரு விளக்கமும் தரவில்லை.

எம்.ராமதிலகம், கோவை.

ஒரு வளையலுக்கு கடன் தரக்கூடாது என்று ரிசர்வ் வங்கி எந்த ஒரு கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. நகையின் வடிவத்தையோ, அது ஜோடியாக தான் இருக்க வேண்டும் என்பதையோ ஆர்.பி.ஐ., கட்டாயப்படுத்தவில்லை.

ஆனால், நகை மதிப்பீட்டாளருக்கு வேறு சந்தேகம் வந்திருக்கலாம். ஒரு ஜோடி வளையலில் ஒன்றை மட்டும் அடகு வைக்க கொண்டு வரும்போது, அது 'திருடப்பட்ட நகையாக இருக்கலாமோ' என்ற தேவையற்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கலாம்.

இன்றொன்று, வாடிக்கையாளர் கடனை திருப்பி செலுத்தாமல், நகை மூழ்கி போகுமானால், அந்த நகையை ஏலம் விடும்போது, ஜோடி வளையலுக்குத் தான் மதிப்பு அதிகம். ஒற்றை வளையல் விற்பனையாகாமல் போகலாம் என்ற வியாபார நோக்கமும் அவரது மறுப்புக்கு பின்னே காரணமாக இருக்கலாம்.

அரசுடைமை ஆக்கப்பட்ட வங்கிக்கு செல்லுங்கள். இத்தகைய பாதுகாப்புமிக்க கடனைக் கொடுக்க அவர்கள் காத்திருக்கிறார்கள்.



ரிசர்வ் வங்கியின் 'ஜாக்பாட் தங்க சேமிப்பு திட்டத்தில்' தனிநபர் மற்றும் இணை நபர்கள் இணைந்து சேமிக்கும் திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளனவா? சேமிக்கும் ஒரு லட்சம் ரூபாய்க்கு ஐந்து ஆண்டுகளுக்கு பின் முதிர்வு தொகை 3.48 லட்சம் ரூபாய் லாபமாக வங்கி சேமிப்பு கணக்கில் வரவு வைக்கும் திட்டம் தானா? தங்க பத்திரம் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாமா?

வெ.மணி, தேனி.

நீங்கள் கேட்பதெல்லாம் 'வாட்ஸ் அப்' பார்வேர்டு, யுடியூப் அபத்தங்களின் மொத்த கலவையாக உள்ளது. இதில் எது உண்மை என்பதை சற்றே பிரித்து சொல்லி விடுகிறேன்.

ரிசர்வ் வங்கி எந்த ஒரு 'ஜாக்பாட்' திட்டத்தையும் நடத்தவில்லை. ஐந்து ஆண்டுகளில் 1 லட்சம் ரூபாயை 3.48 லட்சமாக, அதாவது மூன்றரை மடங்காக மாற்றி கொடுக்கும் உத்தரவாதமான திட்டம் எதுவுமே அரசிடம் இல்லை.

ரிசர்வ் வங்கியின் 'தங்கப்பத்திரம்' திட்டத்தை பொறுத்தவரை 2025 ஆரம்பத்தில் இருந்தே வெளியிடுவதை மத்திய அரசு நிறுத்தி விட்டது. அதனால் இப்போது புதிதாக வாங்க முடியாது. பழைய தங்கப் பத்திரங்களை பங்குச்சந்தையில் இருந்து வாங்கி கொள்ளலாம்.

என் சொத்துக்கள் முழுதும், மனைவிக்கும், அதன் பின் மகனுக்கும், பின் பேரனுக்கும் சென்று சேர நான் உயில் எழுத முடியுமா? அவர்கள் எவ்வாறு பட்டா மாறுதல் செய்ய வேண்டும்?

சக்திவேல், திருவண்ணாமலை.

ஆம், நிச்சயமாக எழுதலாம். அதாவது, உங்கள் காலத்திற்கு பின், உங்கள் மனைவி அந்த சொத்தை தன் வாழ்நாள் முழுவதும் அனுபவித்து கொள்ளலாம். ஆனால், அதை அவர் யாருக்கும் விற்கவோ, தானம் செய்யவோ, அடமானம் வைக்கவோ முடியாது.

இதேபோன்று மனைவியின் காலத்திற்குப் பிறகு, மகன் அந்த சொத்தை தன் வாழ்நாள் முழுவதும் அனுபவித்து கொள்ளலாம். அவருக்கும் விற்க உரிமை இல்லை. மகனின் காலத்திற்கு பிறகு, சொத்து முழுமையாக பேரனை சென்றடையும்.

பேரன் அந்த சொத்தை விற்கவோ, தானம் செய்யவோ முழு உரிமை பெற்றவர் ஆவார். அதாவது, மனைவிக்கும், மகனுக்கும் 'அனுபவ பாத்தியதை' மட்டும் உண்டு, பேரனுக்கு மட்டுமே 'முழு உரிமை' உண்டு.

இந்த உயிலை வைத்தே, உங்கள் மனைவியும் மகனும் பட்டா மாறுதல் செய்து கொள்ள முடியும்.

ஆனால், ஒரு விஷயம். நல்ல வழக்கறிஞர் ஒருவரை நாடி, இத்தகைய விவரங்களை சட்டப்பூர்வமான வாசகங்களாக மாற்றி தரச் சொல்லவும். சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து வைப்பது இன்னும் நல்லது.

என்னிடம் உள்ள பங்குகளின் பட்டியலை இணைத்துள்ளேன். இவற்றை 2 ஆண்டுகளுக்கு முன்பு நல்ல ஏற்றத்தில் உள்ள போது வாங்கினேன். கடந்த ஓராண்டாக விலை உயரவில்லை. இவற்றை விற்று விடலாமா? 60 சதவீத விலை இறக்கம். நீண்ட கால முதலீடாக விட்டால் தான் பங்கு விலை உயருமா அல்லது விற்று விடலாமா?

கு.நந்தினி தேவி, கோவை.

உங்கள் போர்ட்போலியோவை கூர்ந்து பார்த்தால், ஒரு விஷயம் புரிகிறது. சந்தை உச்ச கட்டத்தில் இருந்தபோது, 'லாபத்தை விட்டுவிடக் கூடாது' என்ற 'போமோ' மனநிலையில் இந்தப் பங்குகளை அவசரத்தில் வாங்கியுள்ளீர்கள். இவற்றில் பல பங்குகள், இந்த உச்ச விலையை அடைய இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

அதுவும் தற்போது நடைபெற்று வரும் ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் தணிந்து, பங்குச்சந்தையில் நிலைமை சீரானால் தான், பல பங்குகள் தலை நிமிர்ந்தே பார்க்க முடியும். அதனால், நஷ்டத்தை தாங்கும் மனநிலை இருக்குமானால், உங்களிடம் உள்ள பல பங்குகளை விற்றுவிட்டு வெளியேறுவது தான் புத்திசாலித்தனம்.

இன்னொரு பிழையையும் செய்ய வேண்டாம்: ஆவரேஜ் செய்யாதீர்கள். எந்தெந்த பங்குகளை வைத்துக்கொள்ளலாம், எவற்றை விற்பனை செய்யலாம் என்ற முடிவெடுப்பதற்கு நல்லதொரு முதலீட்டு ஆலோசகரை அணுகுங்கள்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல்வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்

ph: 98410 53881






      Dinamalar
      Follow us