/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நாட்டின் சரக்கு ஏற்றுமதி 7% உயர்வு
/
நாட்டின் சரக்கு ஏற்றுமதி 7% உயர்வு
ADDED : செப் 16, 2025 12:03 AM

புதுடில்லி : நாட்டின் சரக்கு ஏற்றுமதி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 6.70 சதவீதம் உயர்ந்து 3.09 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் சரக்கு இறக்குமதி 10.12 சதவீதம் சரிந்து, 5.42 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் தங்கம் இறக்குமதி 56 சதவீதம் சரிந்ததே, இறக்குமதி குறைய முக்கிய காரணமாகும். இதனால் வர்த்தக பற்றாக்குறை 25.80 சதவீதம் சரிந்து 2.33 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
ஆண்டு அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக அமெரிக்கா தொடர்கிறது. அமெரிக்காவுக்கான சரக்கு ஏற்றுமதி கடந்தாண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஆகஸ்டில் 7.15 சதவீதம் அதிகரித்து 60,368 கோடி ரூபாயாக இருந்தது.
இறக்குமதியை பொறுத்தவரை, அதிகபட்சமாக சீனாவிலிருந்து 96,000 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வாங்கப் பட்டுள்ளது.
அமெரிக்காவுக்கு ஏற்றுமதி சரிவு அமெரிக்காவுக்கான இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி, கடந்த ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், ஆகஸ்டில் 14 சதவீதம் சரிந்துள்ளது. இந்திய பொருட்களின் இறக்குமதி மீது அமெரிக்கா ஆகஸ்டில் 50 சதவீதம் வரி விதித்ததே இதன் காரணம்.